தூள் தூளாகுதா தவெக கனவு! விஜய்க்கு செம பிரஷர்? ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் கிட்ட கட்சி மேனேஜ்மெண்ட்?
சென்னை: "விஜய் தனது சொந்த பலத்தை முழுமையாகப் பயன்படுத்தாமல், தன்னைச் சுற்றியிருப்பவர்களின் பேச்சை மட்டுமே அதிகமாக நம்புகிறார்.. கட்சி மேனேஜ்மெண்ட்டை, ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் போன்றவர்களிடம் ஒப்படைத்திருக்கிறார். அவர்கள் ஏற்கனவே பிற கட்சிகளில் இருந்து வந்தவர்கள் என்பதால், பழைய அரசியல் கலாச்சாரத்தையே இங்கும் தொடர்கிறார்கள்" என்று தவெக அரசை விமர்சித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ள ஷ்யாம், "விஜய் பிரச்சாரத்துக்கு வந்தால்தான் ஜெயிக்க முடியும் என்ற நிலைமை 2 தொகுதிகளிலும் உள்ளது.. பொதுவாகவே இடைத்தேர்தல்கள் என்று வரும்போதே பணப்பட்டுவாடா மற்றும் பல்வேறு பிரச்சார உத்திகள் பற்றிய பேச்சுக்கள் எழுவது இயல்பு.

இந்த தேர்தலில் தவெக நிர்வாகிகள் களத்தில் இறங்கி பணப்பட்டுவாடாவையும் பிரச்சாரப் பணிகளையும் தொடங்கிவிட்டதாக பரவலான குற்றச்சாட்டுகளும் தகவல்களும் வெளியாகி வருகின்றன. இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எப்போதும் நிர்வாக பலமும் கூடுதல் வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கும்.
மதுராந்தகம், தாராபுரம்
முதலில் ஈஸியாக வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்தார்கள்.. ஆனால், இப்போது 2 தொகுதிகளிலுமே பிரஷர் கூடிவிட்டது.. முதலில் வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு உள்ளது, அதேபோல, மணல் குவாரி, சாலை பிரச்சனை, 100 நாள் வேலை திட்டம், மின்சார பிரச்சனை என உள்ளூர் பிரச்சனைகளும் அங்கு தலைதூக்கி விட்டன. அதனால் விஜய் நேரில் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைமை வந்துள்ளது.
இந்த உள்ளூர் பிரச்சனைகளுடன் சேர்த்து, குறிப்பிட்ட வேட்பாளர் ஏன் பதவியை ராஜினாமா செய்தார், ஏன் ஆளுங்கட்சியில் சேர்ந்தார் என்ற கேள்விகளும் மக்கள் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.. அதேபோல அரசு ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்காக இயங்குவது போல தன்னை காட்டிக்கொள்கிறது.. அரசு அப்படி இருக்கக்கூடாது. அனைவருக்குமான அரசாக இருக்க வேண்டும்.
திமுக, அதிமுக பலம்
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று அன்புணி அறிவித்து விட்டார்.. அதற்காக வன்னிய மக்கள், தவெகவுக்கு ஓட்டு போடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.. காரணம், தவெகவில் விசிகவும் உள்ளது.. அதனால் திமுக, அதிமுகவுக்கு வன்னியர்கள் வாக்குகள் விழலாம்.
கள நிலவரங்களைப் பார்க்கும்போது திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகிய 3 கட்சிகளுமே சம பலத்துடன் மோதுவதைக் காண முடிகிறது. தவெகவுக்கு ஆட்சியில் சில அட்வான்டேஜ்கள் இருந்தாலும், தனது கூட்டணிக் கட்சிகளைச் சீராக ஒருங்கிணைப்பதில் சில சவால்களையும், முரண்பாடுகளையும் சந்திக்கிறது.
திமுகவும் அதிமுகவும் தங்களது கூட்டணிகளையும் தொண்டர்களையும் சரியாக ஒருங்கிணைத்துச் செயல்படும்.. ஆனால், தவெக கூட்டணியில் பிற தலைவர்களை சரியாக அரவணைத்துச் செல்லாதது அக்கட்சிக்கு ஒரு பின்னடைவாக மாற வாய்ப்புள்ளது. இது திமுக, அதிமுகவுக்கு பிளஸ் பாயிண்ட்ஸ்.
தொகுதி நிலவரப்படி, மதுராந்தகத்தில் தவெகவுக்கு சற்று சாதகமான சூழல் இருந்தாலும், தாராபுரத்தில் அதிமுக முந்துகிறது... அதனால்தான் முதலமைச்சர்கள் வழக்கமாக இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு நேரில் செல்வதில்லை என்ற மரபை உடைத்து, விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
பழைய பாதையிலேயே விஜய்
மற்றொருபுறம், கட்சிக்குள்ளேயே பல அதிருப்தி அலைகள் வீசுகின்றன. தவெக ஒன்றிய செயலாளர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல வருடங்களாகவே கட்சிக்காக உழைத்த தொண்டர்களை விடுத்து, மற்ற கட்சிகளிலிருந்து புதிதாக வந்தவர்களுக்கு முக்கியத்துவமும் பதவிகளும் வழங்கப்படுவதே இந்த அதிருப்திக்குக் காரணம்.
அரசியலில் மாற்றுக் கட்சியினரைச் சேர்ப்பதும் பதவிகள் தருவதும் வழக்கமானதுதான் என்றாலும், ஒரு சினிமா ஸ்டாராக களம் கண்ட விஜய், தனது முதல் தேர்தலிலேயே இதுபோன்ற சில தவறுகளைச் செய்துவிட்டார். 1972-க்குப் பிறகு திமுக, அதிமுக என 2 கட்சிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய நிலையில், அதை உடைத்து, ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை விஜய் கொண்டு வருவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் வி4ய் மீண்டும் பழைய அரசியல் முறைகளையே பின்பற்றுவது ஏமாற்றமளிக்கிறது.
தவெகவுக்குள் அதிருப்திகள்
விஜய் தனது சொந்த பலத்தை முழுமையாகப் பயன்படுத்தாமல், தன்னைச் சுற்றியிருப்பவர்களின் பேச்சை மட்டுமே அதிகமாக நம்புகிறார்.. கட்சி மேனேஜ்மெண்ட்டை, ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் போன்றவர்களிடம் ஒப்படைத்திருக்கிறார்.
அவர்கள் ஏற்கனவே பிற கட்சிகளில் இருந்து வந்தவர்கள் என்பதால், பழைய அரசியல் கலாச்சாரத்தையே இங்கும் தொடர்கிறார்கள். இதனால் விஜய் ஒரு புதிய அரசியல் பாதையை உருவாக்கத் தவறிவிட்டார். இந்த அதிருப்திகளே இப்போது தொண்டர்களிடையே வெளிப்படையாக வெடிக்கத் தொடங்கியுள்ளன. தொடக்கத்திலேயே உருவெடுக்கும் இதுபோன்ற உட்கட்சிப் பூசல்களும், தொண்டர்களின் அதிருப்தியும் நீண்டகால அடிப்படையில் தவெக கட்சிக்கு நல்லதல்ல" என்றெல்லாம் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
