அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம்.. பட்ஜெட்டில் நிறைவேற்றப்படாத விஜயின் அறிவிப்பு
சென்னை: லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம் என்று தவெக கூறியுள்ளது. திமுக, அதிமுகவுக்கு மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சியை பிடித்த தவெக அரசின் முதல் பட்ஜெட் சட்டமன்றத்தில் இன்று காலை தாக்கல் செய்யப்படவுள்ளது. தவெக அறிவித்த பல்வேறு தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம் என்று அறிவித்த திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், அதற்கான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாதது மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
தவெக ஆட்சியமைத்து 3 மாதங்களாகிவிட்டது. அரை நூற்றாண்டு திராவிட அரசியல் ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டு தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. தேர்தலில் தவெக அரசு நிறைய வாக்குறுதிகளை கொடுத்தனர். மகளிர் உரிமை தொகையை 2,500 ஆக உயர்த்துவோம், வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் வழங்குவோம், விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி, அண்ணன் சீர் வரிசை, அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம், வேலையில்லா பட்டதாரிகக்கு ரூ.4,000 உதவி தொகை உள்ளிட்ட பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

தவெக ஆட்சிக்கு வந்தவுடன் 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்க பெண் பாதுகாப்பு படை ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளன. தாய்மாமன் தங்க மோதிர திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாக்களித்த மக்களை தவெக ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள். தவெகவின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
முன்னதாக திமுக ஆட்சியில் கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் சட்டமன்றம் கூடியது. அதனை தொடர்ந்து நிதியமைச்சர் மரிய வில்சன் 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். நாளை வேளாண்துறை அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். பட்ஜெட் குறித்து மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகமிருந்தது.
அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம்
கடந்த திமுக ஆட்சியில் விடியல் பயணம் திட்டம் அமல்படுத்தப்பட்டது. நகர பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கும் வகையில் திட்டம் பயன்பாட்டில் இருந்தது. தவெக தேர்தல் வாக்குறுதியில் அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் விஜய் கடந்த மாதம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தற்போது அரசு பேருந்துகளில் சுமார் 62 சதவீதம் பெண்கள் பயணிக்கிறார்கள். நகர பேருந்துகளில் மகளிர் இலவசம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டத்திற்காக போக்குவரத்து கழகங்களுக்கு மாதம் ரூ.16 கோடி ஒதுக்கப்படுகிறது. அனைத்து பேருந்துகளிலும் இத்திட்டத்துக்கு எவ்வளவு நிதி தேவைப்படும், வருவாயை பெருக்குவது எப்படி என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.


Click it and Unblock the Notifications
