“100 நாட்களில் தவெக அரசு எந்த கெட்ட பெயரையும் எடுக்கவில்லை..” - பாராட்டிய திருமாவளவன்!
சென்னை: "தவெக கட்சியினர் ஆட்சி நிர்வாகத்திற்கு புதியவர்கள். இந்த 100 நாட்களில் பெரிய அளவில் எந்த கெட்ட பெயரையும் தவெக அரசு எடுக்கவில்லை" என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. தமிழக எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கப்படவுள்ளது பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், "எங்கள் சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி விடுத்த கோரிக்கையை கேட்டு கார் வழங்க உள்ளதை விசிக வரவேற்கிறது அதற்காக நன்றி சொல்கிறது. இதனால் வரக்கூடிய செலவை சமாளிக்க முடியும் என்பதால் தான் இந்த முடிவை முதல்வர் எடுத்திருப்பார்" எனத் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து திமுக செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் பற்றி பேசிய திருமாவளவன், "திராவிட முன்னேற்ற கழகத்தை வலிமையோடு கொண்டு வர வேண்டும் என்று ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதால் இது போன்ற மாற்றங்களை திமுகவில் செய்கின்றனர். அதிகாரத்தை ஒரு குறிப்பிட்ட இடத்தில் திணிக்க கூடாது. அதை வளர்க்க வேண்டும் என்றுதான் விடுதலை சிறுத்தைகளும் வயது, வரம்பு பார்த்து பொறுப்புகளை கொடுத்து வருகிறோம். தற்போது திமுகவும் அதை செய்து வருகின்றது." என்றார்.
மேலும் பேசிய திருமாவளவன், "நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை கொண்டுவரத் தேவை இல்லை. அதை 25 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்ற முடிவை ஏற்கனவே தவெக அரசு எடுத்துள்ளது. எனவே அந்த முடிவிலிருந்து மாறாது என்று நான் நம்புகிறேன்.
இந்த நூறு நாட்களில் தமிழக வெற்றிக் கழகம் பொதுமக்கள் இடையே எந்த ஒரு பெரிய தவறான கருத்துகளையும் பெறவில்லை. சொல்லப் போனால் பொதுமக்கள் லஞ்ச லாவண்யம் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று வெளிப்படையாகவே சொல்கிறார்கள்.
விவாதிக்க தெரியவில்லை.. பதில் சொல்ல தெரியவில்லை என்பது ஜனநாயகத்தில் ஒரு குறைபாடு இல்லை. எதிர்க்கட்சிகள் தவெக அரசை ஆறு மாதத்திற்கு எந்த கேள்வியும் கேட்க கூடாது என்று சொன்னார்கள். அப்படி பார்த்தாலும் கூட இன்னும் மூன்று மாத காலம் அவர்களுக்கு அவகாசம் உள்ளது.
சமீபத்தில் மாநாட்டில் சலசலப்பு ஏற்பட்டது. மேடையில் புதிய பொறுப்பாளர்களை அமர வைக்க நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம், அதில் குளறுபடி ஏற்பட்டு அப்படி நடந்தது. நான் கரூர் சம்பவம்போல் இன்னொரு சம்பவம் நடந்து விடக்கூடாது என்று எனது உரையை இரண்டு நிமிடத்தில் முடித்துக் கொண்டேன்.
விஜய், வருகைக்குப் பின்னால் விசிக கட்சி தேய்ந்து போய்விட்டது என்று சொன்னவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த மாநாடு இருந்தது. இதில் முப்பது வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகமானவர்கள் பங்கேற்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
