“வெறும் ரீல்ஸ் அரசு.. மீனவர்களின் நிலை உணராமல் பாட்டு பாடிக்கிட்டு இருக்காங்க”.. எடப்பாடி ஆவேசம்!
சென்னை: "வெறும் ரீல்ஸ் வெளியிடும் அரசாகவே தவெக அரசு செயல்படுகிறது. மீனவர் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர கூட தவெக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை தவெக அரசு உணரவில்லை" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சவுதி அருகே ஈரானிய கடற்கொள்ளையர்கள் சுட்டதில் மயிலாடுதுறை மாவட்டம் தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் உயிரிழந்தார். கடற்கொள்ளையர்கள் சுட்டதில் மேலும் 3 மீனவர்கள் படுகாயம் அடைந்து சவுதியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக அதிமுக சார்பில் தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளிக்கப்பட்டது. எனினும், இந்த தீர்மானம் இன்று எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று காலை வெளிநடப்பு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக சட்டமன்றக் குழு தலைவர் எடப்பாடி பழனிசாமி, "சீர்காழி மீனவர் கொலை குறித்து கவன ஈர்ப்பு கொடுத்து 5 நாட்களாக எடுக்கவில்லை. மீனவர் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர கூட தவெக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை" என குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், "சவுதியில் மயிலாடுதுறை மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவத்தை 5 நாட்களாக வலியுறுத்தியும் அதனை கண்டுகொள்ளாமல் சட்டப்பேரவையில் பாட்டு பாடிக் கொண்டிருக்கின்றனர். அதிமுக, திமுக என எந்த அரசாங்கம் இருந்தாலும் உடனடியாக கவன ஈர்ப்பை கொண்டு வருவார்கள்; ஆனால் இந்த அரசுக்கு தமிழ் உணர்வு என்பதே இல்லை" எனச் சாடியுள்ளார்.
மேலும், "தவெக அரசு என்ற ஒன்றே நடக்கவில்லை. வெறும் ரீல்ஸ் வெளியிடும் அரசாகவே தவெக அரசு செயல்படுகிறது. மீனவர் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர கூட தவெக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை தவெக அரசு உணரவில்லை" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
