துணைவேந்தர் நியமனம்! ஆளுநரிடமே அதிகாரத்தை ஒப்படைக்கும் நிலைக்கு திரும்புகிறதா தமிழக அரசு?
சென்னை: துணைவேந்தர் நியமனம் மாநில அரசுடைய அதிகாரம் என்று கடந்த திமுக ஆட்சியில் சட்டப்போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், இது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தவெக தலைமையிலான தமிழக அரசு வைத்திருக்கும் வாதம்.. துணைவேந்தர் நியமன விஷயத்தில், ஆளுநரிடமே அதிகாரத்தை ஒப்படைக்கும் நிலைக்கு திரும்புகிறதா தமிழக அரசு? என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
பல்கலைக்கழகங்களுக்கு அந்தந்த மாநிலங்களின் ஆளுநர்கள்தான் வேந்தர்கள். ஆனால், எல்லா பல்கலைக்கழகங்களையும் ஆளுநரால் நிர்வகிக்க முடியாது என்பதால், துணைவேந்தர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

குஜராத் உள்ளிட்ட ஓரிரு மாநிலங்களில் மட்டும்தான், மாநில அரசே துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை வைத்திருக்கிறது. தமிழக அரசும், இதற்கான சட்டப்போராட்டங்களை நடத்தியிருந்தது. உச்சநீதிமன்றமும் இதை ஏற்று தமிழகத்திற்கும் இதற்கான அனுமதி வழங்கியிருந்தாலும்.. இந்த விவகாரம் தொடர்பான முதன்மை வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இருப்பதால்.. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் விஷயத்தில் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது.
நிலைமை இப்படி இருக்கையில், சிதம்பரம் அண்ணாமலையார் பல்கலைக்கழக ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் இதர பணப்பலன்களை வழங்குவது தொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிதம்பரம் அண்ணாமலையார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் என 14 பல்கலைக்கழகங்களில் கடந்த 3-4 ஆண்டுகளாக துணைவேந்தர்கள் நியமிக்கப்படாமல் இருந்தது, மாணவர்களின் கல்வியை பாதிக்காதா? என்கிற கேள்வியை நீதிமன்றம் எழுப்பியிருந்தது. மேலும் இது குறித்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விளக்கமளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜராகியிருந்த தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்து விளக்கமளித்தார். மேலும், இப்படியான வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் கூட.. துணைவேந்தர்கள் நியமன விஷயத்தில் நிலவும் முட்டுக்கட்டைகளை நீக்க.. பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரிடம் இணைந்து சுமூக தீர்வை எட்டும் முயற்சியை இந்த அரசு மேற்கொண்டு வருவதாக கூறியிருந்தார்.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மீண்டும் ஆளுநரிடமே ஒப்படைக்கும் முந்தைய நிலைக்கு தற்போதைய அரசு திரும்புமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதலளித்த அரசு தரப்பு, இந்த விஷயத்தில் தமிழக மாணவர்களின் உயர் கல்வியை கருத்தில் கொண்டு.. ஒரு நிரந்தர தீர்வை காண வேண்டியது அவசியம் என்பதை தமிழக அரசு உணர்ந்திருக்கிறது. துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்க, கல்வியாளர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என தமிழக அரசு கருதுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வாதம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. குறிப்பாக.. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மீண்டும் மத்திய அரசிடமே நாம் கொடுக்கப்போகிறோமா? என கல்வியாளர்களும், மாணவர் சங்கங்களும் கேள்வியை எழுப்பியிருக்கின்றன.


Click it and Unblock the Notifications
