ஹலோ எக்ஸ் சிஎம்.. தவெக ஆட்சி நீடிக்க தெரு தெருவா வேலை பார்ப்பேன்.. ஸ்டாலினுக்கு வைகோ சவால்
திருநெல்வேலி: தவெக கூட்டணி உருவாகி சில மாதங்களே ஆகிறது. அதற்குள் ஏராளமான சர்ச்சைகள் வெடிக்க தொடங்கியுள்ளது. விசிக, காங்கிரஸ் நிர்வாகிகளே தவெக அரசை தினசரி விமர்சிக்கிறார்கள். தவெக ஆட்சியை கவித்து மீண்டும் ஆட்சிக்கு வர திமுக, அதிமுக திட்டமிட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. தவெக ஆட்சி நீடிக்காது என எதிர்க்கட்சிகள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் மீண்டும் தேர்தல் வந்தால் தவெக கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெறும். தவெகவின் வெற்றிக்காக தெரு தெருவாக இறங்கி வேலை பார்ப்பேன் என வைகோ கூறியுள்ளார்.
திருநெல்வேலியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இந்த ஆட்சி 6 மாதம் தான் நீடிக்கும் என ஒரு தலைவர் சொல்கிறார். ஹலோ மிஸ்டர் எக்ஸ் சி.எம். இந்த ஆட்சி 6 மாதம் தான் நீடிக்குமா. இல்லை முழுவதுமாக நீடிக்கும். அதை மீறி தேர்தல் வந்தால் இதைவிட 30 தொகுதிகள் அதிகம் விஜய் ஜெயிப்பார். இந்த வைகோ இவ்வளவு காலமும் போராடி, தேர்தல் களத்தில் நின்றவர்களை ஜெயிக்க வைத்திருக்கிறேன். தேர்தல் வந்தால் இந்த வைகோ தெருத்தெருவாக வருவான்.

ஊர் ஊராக செல்வேன்
ஊர் ஊராக வருவான். அவர்களை வெற்றி பெற வைப்பான். வரக்கூடிய இடைத்தேர்தல்களில் தவெக ஜெயிக்கும். விஜய் நிறுத்தும் வேட்பாளர்கள் ஜெயிப்பார்கள். நீங்கள் எத்தனை படை கொண்டு வந்தாலும் சரி. எத்தனை பொய் பிரச்சாரங்கள் செய்தாலும் சரி. எத்தனை அபாண்ட பிரச்சாரங்கள் செய்தாலும் சரி. அதை தூள் தூளாக்குவதற்கு வைகோவும், மதிமுகவும் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மறுமலர்ச்சி திமுக இந்த அரசை விமர்சிப்பதில்லை.
இனி திமுகவின் ஆட்சி ஒரு காலமும் வராது. அது முடிந்துவிட்டது. வரவே வராது. நீங்கள் திரும்பி திரும்பி கேட்டாலும் அதே பதிலை தான் சொல்வேன். சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அந்தம்மாவே எனக்கு அழைப்பு விட்டிருந்தார். திருமண நிகழ்ச்சி காரணமாக வரமுடியவில்லை. வேறு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதித்துவிட்டேன். உங்கள் புத்தகம் மக்களிடம் சேர்ந்து, புத்தக வெளியீட்டு விழா வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகளை கூறி கொள்கிறேன். திமுக ஆட்சியில் கோயில்களில் போடாத அரோகராவா.
அரசை ஒழிக்க நினைக்கிறார்கள்
கோடி கோடியாக கமிஷன் வாங்கிய அதிகாரிகளுக்கு நின்றுவிட்டது. அதனால் சிலர் இந்த அரசை ஒழித்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்காக எந்த பைலையும் நகர்த்துவதில்லை. மீண்டும் திமுக அரசு வந்தால் நல்லது என அதிகார வர்க்கம் இந்த அரசை ஸ்தம்பிக்க வைக்க நினைக்கிறது. சில நேர்மையான அதிகாரிகள் உள்ளனர். ஆனால் ஊழலில் பழக்கப்பட்டவர்கள் இந்த ஆட்சிக்கு எதிரான நிலையில் உள்ளார்கள். அவர்கள் கனவு நிறைவேறாது" என்றார்.


Click it and Unblock the Notifications
