குரியன் குழு கலைப்புக்கு.. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் எதிர்ப்பு! விஜய்க்கு புதிய சிக்கல்!
சென்னை: மத்திய-மாநில உறவை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட, முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான குழுவை தவெக அரசு கலைத்திருந்தது. இதற்கு முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
கடந்த திமுக ஆட்சியில் 2025, ஏப்.17ம் தேதியன்று இக்குழு உருவாக்கப்பட்டிருந்தது. குழுவின் சார்பில் முதல்கட்ட அறிக்கை கடந்த பிப்ரவரி மாதம் சமர்பிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் கட்ட அறிக்கை இன்னும் 6 மாதங்களில் சமர்ப்பிக்கப்பட இருந்த நிலையில், திடீரென குழுவை கலைக்க தவெக அரசு உத்தரவிட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறியிருந்தன.

இந்நிலையில் தற்போது 72 முன்னாள் குடிமைப் பணி அதிகாரிகள் அடங்கிய அரசியலமைப்பு நடத்தைக்குழு, தமிழக அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
கடந்த பிப்ரவரி மாதம், தனது முதல் பாக அறிக்கையை சமர்ப்பித்து விட்டு.. 2027 ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதிக்குள், இரண்டாம் பாக அறிக்கை தயாரிக்க தீவிரமாக பணியாற்றி வந்த குழுவை, அரசு திடீரென கலைத்திருப்பது புரிந்து கொள்ள முடியாத ஒன்றாக இருப்பதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
அறிக்கையின் இரண்டாம் பாகத்தை சமர்ப்பிக்க இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில்.. அப்பணியை மாநில சட்ட ஆணையத்திற்கு மாற்றியது பின்னோக்கிய நடவடிக்கை என்றும் அவர்கள் விமர்சித்திருக்கிறார்கள். அதேபோல இந்த உயர்மட்ட குழு, சட்டபூர்வமற்ற அமைப்பு என்பதால் கலைக்கப்பட்டதாக அரசு தெரிவித்திருக்கும் காரணத்தையும் அவர்கள் ஏற்க மறுத்திருக்கிறார்கள். இதற்கு முன்னர் மாநில சட்ட ஆணையமும், 1994 ஆம் ஆண்டு அரசாணை மூலம் உருவாக்கப்பட்ட ஒரு நிர்வாக அமைப்பு மட்டுமே என்றும்.. கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட இதே போன்ற ராஜமன்னார் குழு, சர்க்காரியா கமிஷன், மற்றும் பூஞ்சி ஆணையங்களும் நிர்வாக உத்தரவுகள் மூலமாக உருவாக்கப்பட்டவை என்றும் அவர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்.
மத்திய அரசின் கொள்கைகள், மாநிலங்களின் நிதி மற்றும் நிர்வாக சுயாட்சியை பாதித்து வரும் இந்த நேரத்தில்.. மத்திய அரசுக்கு அதிருப்தி ஏற்படுவதை தவிர்க்கவே, தமிழக அரசு இம்முடிவை எடுத்ததா? என அவர்கள் கேள்வியும் எழுப்பியிருக்கிறார்கள். குழுவின் முதல் பாக அறிக்கை, அரசு இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி உள்ள அதிகாரிகள்.. வலுவான கூட்டாட்சி ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையில், நீதிபதி குரியன் ஜோசப் குழுவை மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
