2 சார் யார்? தவெகவின் குதிரை பேரத்தை போட்டுடைத்த ஆர்.பி உதயகுமார்.. பின்னாடியே வந்த நிர்மல் குமார்
சென்னை: தமிழக அரசியலில் தவெக ஆட்சியை சுற்றியுள்ள "குதிரை பேரம்" விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மூத்த தலைவர் ஆர்.பி. உதயகுமார் தொடர்ந்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்துள்ள நிலையில், மறுபடியும் இதே பகீரை தவெக பக்கம் வீசியுள்ளார். இந்நிலையில், அமைச்சர் நிர்மல்குமார் உதயகுமாரை சரமாரியாக விமர்சித்துள்ளார்.. என்ன நடக்கிறது?
தவெக ஆட்சிக்கு வந்தது முதலே, ஆட்சி பெரும்பான்மையை தக்கவைத்துக்கொள்ள எம்எல்ஏக்களை இழுக்க முயற்சி நடந்ததாக பல்வேறு கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதில் அதிமுகவும் அடக்கம்.

அந்தவகையில் மூத்த தலைவர் ஆர்பி உதயகுமார் தவெக ஆட்சிக்கு முன்பும், ஆட்சி அமைந்த பிறகும் சில எம்எல்ஏக்கள் கட்சி மாறியதை சுட்டிக்காட்டி பல்வேறு சந்தர்ப்பங்களில் பலவிதமான கேள்வி எழுப்பியவாறே உள்ளார்.
ஆர் பி உதயகுமார் குற்றச்சாட்டுகள்
குறிப்பாக, "ஒரு கட்சி சின்னத்தில் நின்று மக்களின் நம்பிக்கையைப் பெற்று வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் விரல் மையின் ஈரம் காயும் முன்பே விலை பேசும் விபரீதத்தை தவெக அரங்கேற்றி வருகிறது. இதுவரை தமிழக மக்கள் இதுபோன்றதை கண்டதில்லை
நீதிக்கும், தர்மத்திற்கும், நியாயத்திற்கும், சட்டத்திற்கும், ஏன் மக்களுக்கும் கூட அஞ்சாமல் அடுத்த கட்சி எம்எல்ஏக்களுக்கு ஆஃபர் கொடுத்து ஆள் பிடிக்கும் வேலையை தவெக செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக அதிமுகவை குறிவைத்து ஆள் பிடிக்கிறது.
தவெக குதிரை பேரம்
எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல் அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திப்பது அப்பட்டமான குதிரை பேரம்.. தனது ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க அடுத்த கட்சி எம்எல்ஏக்களை அதிரடியாக தூக்குவதும், அடுத்த அரசியல் கட்சிகளை அன்போடு தூக்குவதும் தமிழகம் இதுவரை கண்டிராத குதிரை பேரம்" என்று விஜய்யை நேரடியாக தாக்கி கொண்டே வருகிறார்.
இப்படியாக தொடர்ந்து குதிரை பேரம் குறித்து குற்றம்சாட்டி வந்த நிலையில், இப்போது மீண்டும் அதே விவகாரத்தை ஆர்.பி. உதயகுமார் கையில் எடுத்துள்ளார். வாணியம்பாடி தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ சையது பாரூக் பாஷா பேசியதாக வெளியான தகவலையும் உதயகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாணியம்பாடி எம்எல்ஏ
அதில், "என்னையும் சட்டமன்ற உறுப்பினர் ஷாஜகானையும் சந்தித்து கோடி கோடியாக பணத்தை எடுத்து வந்து தருகிறோம், கையெழுத்துப் போடுங்கள் என்றார்கள். உள்ளாட்சித் துறை அமைச்சர் பதவி வேண்டுமா அல்லது போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவி வேண்டுமா என்று இரண்டு பேர் எங்களிடம் வெளிப்படையாகவே கேட்டார்கள்" என்று பாரூக் பாஷா பேசியிருக்கிறார்.
அப்படியானால் கோடி கோடியாக பணத்தைக் கொட்டிக் கொடுத்து அமைச்சர் பதவிகளைத் தாரைவார்க்க வந்த அந்த 2 சார் யார்? இது எந்த வகையான குதிரை பேரத்தின் கீழ் வருகிறது என்பதை இன்று சட்டப்பேரவையில், தமிழக மக்களுக்கு விஜய் விளக்கப் போகிறாரா?
தூய்மையான நல்லாட்சி தருவதாகச் சொல்லி அரியணையில் அமர்ந்த முதல்வர் விஜய், தவெக ஆட்சியை தூய்மையான வழியில்தான் பெரும்பான்மை பெற்று நிலைநிறுத்தினாரா அல்லது பெரும்பான்மைக்காக இத்தகைய குதிரை பேரங்களை நடத்தி முடித்தாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்
அந்த 2 சார் யார்?
தமிழ்நாடு இதுவரை காணாத படுமோசமான ஆட்சியாக தவெக அரசு இருக்கிறது. இந்த ஆட்சியில் வெறும் வாய்ஜாலம் மட்டுமே இருக்கிறது. பயிர்க்கடன், சிலிண்டர் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. தூய்மைப் பணியாளர்களுக்கு நிதி இல்லை என்கிறார்கள். ஆனால் தலைமைச் செயலகம் கட்டுவதற்கு மட்டும் ரூ.1,200 கோடி எங்கிருந்து வந்தது?
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம், விவசாயிகள் போராட்டம், குடிநீர் பிரச்சனை என ஆட்சி அமைந்த 115 நாட்களிலேயே பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.. இந்த ஆட்சியே இன்னும் எத்தனை நாட்கள்?" என்று மக்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்" என்றெல்லாம் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
நிர்மல் குமார் காட்டம்
மேற்கண்ட உதயகுமாரின் பலவித குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கடும் பதிலடி கொடுத்துள்ளார். அதிமுகவை அழிவின் பாதைக்கு கொண்டு சென்றதில் ஆர்.பி. உதயகுமாருக்கு 100 சதவீத பங்கு இருப்பதாக நேரடியாகவே சொல்லிவிட்டார் நிர்மல் குமார்.
"ஒவ்வொரு நாளும் வீடியோ வெளியிட்டு தமிழக வெற்றிக் கழக அரசை விமர்சித்துத் தனது இருப்பைக் காட்டிக் கொள்கிறார் உதயகுமார்.. மேலும், திமுகவும் அதிமுகவும் இணைந்து குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகின்றன.. குதிரை பேரம், ஒட்டக பேரம் எல்லாம் அவர்கள்தான் செய்து வருகிறார்கள்..
அதிமுக + திமுக
எடப்பாடி பழனிசாமியும் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து என்ன செய்தார்கள் என்பது உதயகுமாருக்கே நன்றாகத் தெரியும்.. இப்படியே பேசிட்டு இருந்தால், கவுன்சிலர் தேர்தலில்கூட சிரமம் ஏற்படும்" என்று உதயகுமாரை நிர்மல் குமார் எச்சரித்துள்ளார்.
ஆக, "அந்த 2 சார் யார்?" என்ற உதயகுமாரின் கேள்வியும், அதற்கு "திமுகவும் அதிமுகவும்தான் குதிரை பேரம் நடத்துகின்றன" என்ற நிர்மல் குமாரின் குற்றச்சாட்டும் பரபரப்பை அதிகரித்துள்ளன. இரு தரப்பும் ஒருவரை ஒருவர் நேரடியாக குற்றம்சாட்டியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து முதல்வர் விஜய் என்ன விளக்கம் அளிக்கப் போகிறார் என்பதே அடுத்த கேள்வியாக மாறியுள்ளது... பொறுத்திருந்து பார்ப்போம்..!!!


Click it and Unblock the Notifications
