திமுகவுக்கு டஃப் கொடுப்பாங்க.. அமெரிக்கா, லண்டனில் பொறுப்பாளர்கள்.. தவெக தலைவர் விஜய் அறிவிப்பு!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் சமூக ஊடக அணியில் அமெரிக்கா, லண்டன், கனடா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பது ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள தவெக தலைவர் விஜய், ஜூன் 22ஆம் தேதி தனது 51வது பிறந்தநாள் விழாவை கொண்டாட தயாராகி வருகிறார். இதனிடையே தவெகவில் ஐஆர்எஸ் அதிகாரி அருண் ராஜ் இணைந்தார்.

அவருக்கு தவெகவில் கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எஞ்சிய 6 மாவட்டச் செயலாளர்களையும் நியமித்து, அடுத்தக் கட்ட நிர்வாகிகளை விஜய் நியமித்து வருகிறார். ஜூலை முதல் வாரத்தில் தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மொத்தமாக 42 நாட்கள் நடக்கும் சுற்றுப்பயணத்தில் மக்களை நேரடியாக சந்திக்க உள்ளார்.
அதற்காக கட்சியின் கட்டமைப்பு பணிகளை முடிக்க விஜய் முடிவு செய்து அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று மாநில வழக்கறிஞர் அணி, மண்டல அளவிலான வழக்கறிஞர் அணி நிர்வாகிகளை நியமனம் செய்தார். மண்டல அளவில் மட்டும் 11 வழக்கறிஞர்கள் அணி உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல் தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் சமூக ஊடக அணியின் ஒருங்கிணைப்பாளர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதிலும் மண்டல அளவிலான அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் சமூக ஊடக அணிக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் சமூக ஊடக அணியில் பிற நாடுகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அமெரிக்கா, லண்டன், ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளிலும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திமுகவில் அயலக தமிழர்கள் அணி இருப்பதை போல், தவெகவில் சமூக ஊடக அணி பல்வேறு நாடுகளிலும் உருவாக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications