"கொள்கை எதிரி" பாஜகவுடன் கூட்டணி இல்லைனு விஜய் சொன்னாரா? ஆவேசமான தமிழிசை செளந்தரராஜன்!
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இதனையொட்டி அதிமுக - பாஜக ஆகிய 2 கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் போது இன்னும் சில கட்சிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பாமக, தமாகா, நாதக உள்ளிட்ட கட்சிகளுடன் பாஜக மற்றும் அதிமுக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தாக்கம் மிகப்பெரியளவில் இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே அதிமுக தரப்பில் தவெக உடன் சில கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அதில் ஒத்துப்போகாததால், பாஜக உடன் கூட்டணி உறுதி செய்ததாக தகவல் வெளியாகியது.

இதனிடையே சில நாட்களுக்கு முன்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக தலைவர் விஜய் பாஜக கூட்டணியில் பங்குபெறுவது அவருடைய விருப்பம். தமிழ்நாட்டில் மக்களுக்கு எதிரான ஆட்சியை அகற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதுவே என் விருப்பம். மக்கள் நலன் கருதி கட்சித் தலைவர்கள் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அதேபோல் விஜய்-ன் பேச்சு மற்றும் அறிக்கையில் அதிமுக மீது விமர்சனங்கள் இதுவரை வைக்கவில்லை. இதனால் விஜய் மனதில் அதிமுக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் பாஜக சார்பாக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை மாநில பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்-யிடம் இருந்து இதுவரை பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
வேறு யார் கருத்து சொன்னாலும், பதில் சொல்ல முடியாது. கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு பாஜகவின் தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே என் கருத்து என்று தெரிவித்துள்ளார். தவெக என்ற அரசியல் கட்சி தொடங்கப்பட்டதில் இருந்தே திமுக மற்றும் பாஜகவை மட்டுமே விஜய் எதிர்த்து வருகிறார்.
கொள்கை எதிரியாக பாஜகவையும், அரசியல் எதிரியாக திமுகவையும் தனது முதல் மாநாட்டிலேயே அறிவித்தார். ஆனாலும் விஜய் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று தமிழிசை செளந்தரராஜன் கூறி இருக்கிறார். இதனால் வரும் காலங்களில் அரசியல் காட்சிகள் மாறலாம் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications