ஜெயலலிதா பாணியில் இறங்கும் விஜய்.. மண்டல அளவில் நடக்கும் 4 மாநாடு.. இம்மாத இறுதியில் வரும் அறிவிப்பு
சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பாணியில் தமிழிக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மண்டல அளவில் 4 மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தவெக பொதுக்குழு கூட்டத்திற்கு பின் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அளவில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைத்தவாறு மாநாடுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்கள் மட்டுமே இருக்கிறது. இதற்காக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தற்போது கட்டமைப்பு பணிகளை தொடங்கிவிட்டனர். இதனிடையே 2026ல் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவுள்ளது. இதற்கான பணிகளில் விஜய் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

ஏற்கனவே தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மற்றும் விஜய் சந்திப்பு நடந்திருப்பதால், அரசியல் கட்சியினரும் இந்த சந்திப்பை திரும்பி பார்த்துள்ளனர். இதனிடையே விஜய் தொடங்கியுள்ள தவெக-வுக்கு 20 சதவிகிதம் வரை வாக்கு வங்கி இருப்பதாக பிரசாந்த் கிஷோர் கூறியது விவாதமாகியது. ஏனென்றால் 20 சதவிகிதம் வாக்கு வங்கி விஜய் கட்சிக்கு இருந்தால், எதிர்க்கட்சியாகவே வந்துவிட முடியும்.
இந்த நிலையில் விஜய் விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக மண்டல அளவில் 4 மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வரும் 26ஆம் தேதி தவெகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடக்கவுள்ளது.
அதன்பின் தமிழ்நாடு முழுவதும் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பாணியிலான அரசியலை கையில் எடுக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏனென்றால் எதிர்க்கட்சியாக இருக்கும் போது தேர்தல் நேரங்களில் மண்டல அளவிலான பிரம்மாண்ட மாநாடுகளை ஜெயலலிதா நடத்துவார்.
ஆளுங்கட்சிக்கு எதிரான மக்களின் எதிர்ப்பலையை மொத்தமாக அதிமுகவின் ஆதரவு அலையாக மாற்ற ஜெயலலிதாவின் ஸ்டைலாக மாநாடுகள் இருக்கும். அந்த வகையில் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைத்தவாறு மாநாடுகளை நடத்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
இந்த 4 மாநாடுகள் தொடர்பாக தவெகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. அதேபோல் பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல் விஜய் சுற்றுப்பயணத்தை அந்தந்த மாவட்ட நிர்வாகிகளும் அதிகமாக எதிர்பார்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications