நாளை போராட்டம்.. இன்றே ஆக்ஷனில் இறங்கிய விஜய்.. லாக் அப்பில் பலியானவர்களின் குடும்பத்தினருடன் மீட்டிங்
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழகத்தில் காவல்துறை விசாரணையின் போது பலியான 18 பேரின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுடன் பேசினார். சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து அவர்களுடன் பேசினார். அப்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். இந்த சந்திப்பின் போது புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் தற்போது முழு நேர அரசியலில் ஈடுபட தொடங்கியுள்ளார். கடைசியாக கையில் இருந்த ஜனநாயகன் திரைப்படத்தின் சூட்டிங் முடிந்த நிலையில் அடுத்தடுத்து கட்சி தொடர்பான பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

களத்தில் இறங்கும் விஜய்
மக்கள் பிரச்சினைகள் பற்றி விஜய் பேச ஆரம்பித்து உள்ளார். குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த செயற்குழு கூட்டத்தில் பரந்தூர் விவசாய மக்களுக்கு ஆதரவாக பேசினார். அப்போது தயவு செய்து சிஎம் சார் பரந்தூர் மக்களை நேரில் பார்த்து சீக்கிரமாக தீர்வு காணுங்கள். இல்லையெனில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்கள், விவசாயிகளை அழைத்து வந்து நானே தலைமை செயலகத்தில் கேள்வி கேட்பேன் என்று பேசியிருந்தார்.
18 பேரின் குடும்பத்தினரை அழைத்து
இதேபோன்று சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித் குமார் என்ற 28 வயது இளைஞர் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக அஜித் குமாரின் வீட்டுக்கே சென்ற தவெக தலைவர் விஜய் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போதே இதனை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என தவெக சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நாளை சென்னையில் போராட்டம் நடைபெற இருக்கிறது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அஜித் குமார் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்தது மற்றும் இதேபோன்று தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 18 பேர் காவல்துறை விசாரணையில் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் இது தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்டும் இதனை கண்டித்தும் நாளை தவெகவினர் போராட்டம் நடத்துகிறார்கள்.
கண் கலங்கிப்போன விஜய்
இந்த நிலையில் இன்று இதுவரை தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் காவல்துறை விசாரணையின் போது 18 பேர் உயிரிழந்துள்ளதாக வழக்குகள் பதிவாகியிருக்கும் நிலையில், அவர்களது குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களிடம் பேசுகிறார். இதற்காக 18 பேரின் குடும்பத்தினரை சென்னை பனையூர் அலுவலகத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி இன்று மாலை 18 பேரது குடும்பத்தினரும் சென்னை பனையூர் அலுவலகம் வந்தனர்.
இதையடுத்து அவர்களை விஜய் சந்தித்து பேசினார். அவர்களுக்கு துணையாக இருப்பதாகவும், 18 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.25 ஆயிரம் நிதி உதவியும் விஜய் வழங்கினார். மேலும் அவர்கள் எப்படி உயிரிழந்தனர் என்பது குறித்து குடும்பத்தினர் கூறும்போது விஜய் கண்கலங்கியதாகவும் தகவல் வெளியானது. இந்த சந்திப்பில் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications