தவெக பொதுக்குழு கூட்டம்.. பூத் கமிட்டி மாநாட்டு தேதியை அறிவிப்பாரா விஜய்? நாளை முக்கிய முடிவு!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நாளை காலை 10 மணிக்கு திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடக்கவுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தவெக சார்பாக 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் கூறப்படும் நிலையில், தவெகவின் பூத் கமிட்டி மாநாடு தேதி அறிவிக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் செய்வது தொடர்பான முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் பிரம்மாண்ட மாநாடு நடத்தப்பட்ட நிலையில், அதன்பின் நிர்வாகிகள் நியமனத்தில் கவனம் செலுத்தியது. இதனிடையே கடந்த மாதம் தவெகவின் 2வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டார்.

பூத் கமிட்டி மாநாடு
2வது ஆண்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், சட்டமன்றத் தேர்தலை சந்திக்க ஒவ்வொரு கட்சிக்கும் பூத் கமிட்டி மிகவும் முக்கியம். சாதாரணமாக ஒரு கட்சிக்கு 69 பூத் கமிட்டி தேவையாக உள்ளது. இதனால் அடுத்ததாக தவெக சார்பாக பூத் கமிட்டி மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்தார்.
தவெக பொதுக்குழு கூட்டம்
இந்த நிலையில் நாளை சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் தவெக பொதுக்குழு கூட்டம் நடக்கவுள்ளது. முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால், அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தவெகவில் இருந்து 2,150 பேர் பங்கேற்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. கட்சி நிர்வாகிகள் அனைவரும் காலை 7.30 மணிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீர்மானங்கள்
இதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் போராட்டம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை, தொகுதி மறுசீரமைப்பு, இருமொழிக் கொள்கை என்று மொத்தமாக 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதேபோல் இந்த பொதுக்குழு கூட்டத்தில் தவெகவின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து விஜய் அறிவிக்கவிருக்கிறார்.
தவெக செயல்பாடுகள்
ஏனென்றால் கடந்த சில நாட்களாகவே தவெக சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் மாவட்டச் செயலாளர்கள் தங்கள் மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக போராட்டம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. இதன்பின் சில மாவட்டங்களில் தவெக சார்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டன.
விஜய் சுற்றுப்பயணம்
இதுதொடர்பாக விவரங்களை தவெக தலைமைக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் பொதுக்குழுவில் பேசவுள்ள விஜய், பூத் கமிட்டி மாநாட்டு தேதியை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தமிழ்நாடு முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஏப்ரல் மாதத்துடன் ஜனநாயகன் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது.
அடுத்தது என்ன?
இதன்பின் அந்த சுற்றுப்பயணம் தொடங்குவார் என்று அக்கட்சியினர் மத்தியில் கூறப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசியலில் தேர்தலுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பாகவே கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விஜய்-ன் அடுத்தக்கட்ட நகர்வுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications