அண்ணா, எம்ஜிஆர்.. தவெகவின் கொள்கைத் தலைவர்களா? விஜய் அறிக்கையில் கவனிச்சீங்களா!
சென்னை: அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக மற்றும் அதிமுகவின் தலைவர்களான அண்ணா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தவெகவின் கொள்கைத் தலைவர்களாக இருவரையும் விஜய் ஏற்றுக் கொண்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கடந்த ஓராண்டாக தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் விஜய் நடத்தி வருகிறார். மாதத்திற்கு ஒருநாள் கட்சி விழாவில் கலந்து கொள்ளும் விஜய், இதுவரை களத்திற்கு வந்து மக்களை சந்திக்கவே இல்லை. வீடியோ மற்றும் அறிக்கை மூலமாகவே மட்டுமே விஜய் அரசியல் செய்து வருகிறார். இதனால் தவெக 2026 சட்டமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஃபாசிசம் - பாயாசம்
அதேபோல் ஃபாசிசம் மற்றும் பாயாசம் என்ற வார்த்தைகளால் பாஜக மற்றும் திமுகவை விஜய் விமர்சித்து வந்தார். இருவரும் கள்ளக் கூட்டணி அமைத்திருப்பதாகவும் விமர்சித்தார். இந்த நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் இதனை எப்படி எதிர்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அதிமுக - பாஜக கூட்டணி
இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவை மறைமுகக் கூட்டாளியாக ஏற்கெனவே தயார் செய்துவிட்ட நிலையில், தன்னுடைய பழைய பங்காளியான அஇஅதிமுகவைப் பகிரங்கக் கூட்டாளியாகப் பாஜக மீண்டும் கைப்பிடித்துள்ளது ஒன்றும் ஆகப் பெரிய ஆச்சர்யமில்லை. ஏற்கெனவே 3 முறை தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு நிர்ப்பந்தக் கூட்டே இப்போது ஏற்பட்டுள்ளது என்று விமர்சித்துள்ளார்.
அண்ணா - எம்ஜிஆர்
அதுமட்டுமல்லாமல், பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் என நம்முடைய கொள்கைத் தலைவர்கள் மற்றும் அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற மாபெரும் மக்கள் செல்வாக்கு பெற்ற அரசியல் ஆளுமைகளின் ஆசியுடனும், மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கை உறுதியுடனும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் உண்மையான ஒரு மாற்றத்தை வேண்டி விரும்பி நிற்கும் கோடிக்கணக்கான இளைஞர்களும் பெண்களும் தாய்மார்களும் மாபெரும் மக்கள் சக்தியாகத் திரண்டு நிற்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
தவெக கொள்கைத் தலைவர்கள்
இதுவரை கொள்கைத் தலைவர்களை மட்டுமே கூறி வந்த விஜய், அண்ணா மற்றும் எம்ஜிஆர் ஆகிய இரு திராவிட கட்சிகளின் ஆளுமைகளையும் பயன்படுத்தி இருப்பது விவாதமாகி உள்ளது. இதனால் அண்ணா மற்றும் எம்ஜிஅர் ஆகியோரையும் தமிழக வெற்றிக் கழகம் கொள்கைத் தலைவர்களாக ஏற்றுக் கொண்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications