முஸ்லீம்களை அவமதித்த தவெக விஜய்? இப்தாரில் ரவுடிகள், குடிகாரர்கள் பங்கேற்பு? கமிஷனர் ஆபிசில் புகார்
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நடிகரும் அக்கட்சியின் தலைவருமான விஜய் பங்கேற்று இருந்தார். இந்த நிலையில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி மூலம் இஸ்லாமியர்களை விஜய் அவமதித்துள்ளதாக தமிழ்நாடு சுன்னத் ஜமாஆத் அமைப்பு குற்றம் சாட்டி உள்ளது. மேலும் விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தை ஆரம்பித்த பிறகு பரந்தூருக்கு சென்றதைத் தவிர விஜய் பெரிய அளவில் எந்தவித அரசியல் அல்லது மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் முதன்முறையாக மதம் சார்ந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளப் போகிறார் என்ற அறிவிப்பே பரபரப்பை கிளப்பியது.

கடந்த 7ஆம் தேதி மாலை சென்னை ராயப்பேட்டையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்வார் எனவும், மாலை 6:24 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவித்தபடி அன்று மாலை நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரச்சார பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நிகழ்ச்சி நடக்கும் அரங்குக்கு வருகை தந்தார். வெள்ளை கைலி, வெள்ளை சட்டை, தலையில் தொப்பியோடு வந்த அவரை அங்கிருந்த நிர்வாகிகள், இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் ஜமாத் நிர்வாகிகள் வரவேற்றனர்.
தொடர்ந்து விஜய் வருகையால் உற்சாகமடைந்த தமிழக வெற்றிக் கழகத்தினரும், ரசிகர்களும் தடுப்புகளை தாண்டி குதித்து வளாகத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கிருந்த பவுன்சர்கள் அவரை தடுத்து நிறுத்த முற்பட்டனர். அப்போது தொண்டர்கள் பவுன்சர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அரங்கம் முழுவதுமாக நிறைந்ததால் அழைப்பிதழோடு வந்தவர்களும் அரங்கத்திற்கு வெளியே காக்க வைக்கப்பட்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து ஆறு மணிக்கு விஜய் நோன்பு திறக்கும் அரங்குக்கு வந்தார். நோன்பு திறப்பதற்காக நோன்பு கஞ்சி, மட்டன் சமோசா, உலர் பழங்கள், ஜூஸ் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. துவா செய்த பிறகு நோன்பு கஞ்சி, பேரிச்சை, சமோசா ஆகியவற்றை சாப்பிட்டு நோன்பு திறந்தார் விஜய். தொடர்ந்து ரமலான் தொழுகை நடந்த நிலையில், அதிலும் விஜய் கலந்து கொண்டார். பின்னர் தவெக சார்பில் அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது.
தொடர்ந்து விஜயின் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தான் இரண்டு நாட்களுக்கு தமிழக அரசியலில் பேசு பொருளாக இருந்தது. இந்த நிலையில் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பிறகு இஸ்லாமியர்களை விஜய் புண்படுத்தி விட்டதாக தமிழ்நாடு சுன்னத் ஜமாத் தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. நோன்பு நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் அவமதிக்கப்பட்டதாகவும், விஜய் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அமைப்பின் பொருளாளர் சையத் கெளஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இதுதொடர்பாக பேசிய அவர்," விஜய் ஏற்பாடு செய்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். நோன்பு கடைபிடிக்காத இப்தாருக்கு தொடர்பே இல்லாத மது குடித்தவர்களும் ரவுடிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்கள். இதை இஸ்லாமியர்கள் மற்றும் நோன்பு கடைப்பிடிப்பவர்களை அவமதிப்பது போல இருக்கிறது. முஸ்லிம்களின் பண்பாட்டு நிகழ்ச்சியை அவமதித்திருக்கிறார். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத நிலையில் பவுன்சர்கள் மூலம் அங்கிருந்தவர்கள் விலங்குகள் போல நடத்தப்பட்டுள்ளனர். மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க விஜய் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக புகார் அளித்துள்ளோம்" என அவர் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
