“ஒன்ஸ்மோர்” கேட்ட தொண்டர்கள்.. மாநாட்டு மேடையில் 2 முறை ஒலித்த தவெக கொள்கைப் பாடல்!
சென்னை: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று நடைபெற்று வரும் நிலையில், தவெகவின் கொள்கைப் பாடல், மாநாட்டு மேடையில் வெளியிடப்பட்டது. தொண்டர்களின் விருப்பத்துக்கு இணங்க "தவெக கொள்கைப் பாடல்" மீண்டும் இரண்டாவது முறையாக ஒலிக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் நடைபெற்று வருகிறது. மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஏராளமான தொண்டர்கள் காலை முதல் வருகை தரத் தொடங்கியதால், அவர்களை அதிக நேரம் காக்க வைக்க வேண்டாம் என்ற நோக்கிலும், தொண்டர்களின் பாதுகாப்பு கருதி முன்கூட்டியே மாநாட்டை முடிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டதாலும் முன்கூட்டியே மாநாடு தொடங்கப்பட்டது.

தொண்டர்கள் வீசிய கட்சித் துண்டுகளை தோளில் அணிந்தபடி நடைபாதையில் நடந்து சென்ற விஜய், மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கம்பத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்றி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் மாநாடு தொடங்கியது. விஜய் உட்பட அனைவரும் நெஞ்சில் கை வைத்து கட்சி உறுதி மொழி எடுத்துக்கொண்ட நிலையில், விஜய் கட்சியின் கொள்கைப் பாடல் ஒலிக்கப்பட்டது.
மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கை, தமிழக வெற்றி கழகத்தின் கொள்கையாக இந்த கொள்கைப் பாடலுக்கு இடையே தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். தவெகவின் கொள்கைப் பாடலை விஜய்யும் சேர்ந்து பாடியுள்ளார். தவெக கொள்கைப் பாடல், தொண்டர்கள் "ஒன்ஸ்மோர்" கேட்டதால் மீண்டும் ஒருமுறை ஒலிக்கவிடப்பட்டது.
"புதியதோர் விதி ஒன்றை புதுமையாய் நாம் செய்வோம். புது தொடக்கம், யார் தடுக்கும், இனி நடை நடை என நடக்கும். போர் துவக்கம் யார் தடுத்தும், இனி நட நடவென நடக்கும். பறை முழங்கிட தரை நடுங்கிட தலைமுறை தலைநிமிர்த்தும்.
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன ஆதியோன் திருவள்ளுவர் வழியில் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவராக பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரையும், பெருந்தலைவர் காமராஜரையும், அரசியல் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரையும், வீரத்தமிழ் மங்கை வேலுநாச்சியாரையும், மக்கள் சேவகர் அஞ்சலையம்மாளையும் நம்முடைய அரசியல் வழிகாட்டிகளாக ஏற்று, சாதி, மத, பாலின பாகுபாடு இல்லாத சமத்துவ சமுதாயத்தை உண்டாக்க, மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகளோடு தமிழக வெற்றிக் கழகத்தின் வழியாக உங்களுக்காக உழைக்கனும்னு நான் வரேன்" என தவெக-வின் கொள்கைப் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications