அடிபட்டு செத்து போவ.. அணில் குஞ்சு! விஜயை வீரியமாக எதிர்க்கும் சீமான்! டோன் மாறுதே..இதுதான் காரணம்?
சென்னை: தம்பி.. தம்பி என்று நடிகர் விஜயை சிலாகித்துக் கொண்டிருந்த சீமான். தற்போது அணில் குஞ்சுகள் .. அடிபட்டு செத்துப் போவ.. என வெளிப்படையாக விமர்சிக்க தொடங்கி இருக்கிறார். திமுகவை விட தற்போது தமிழக வெற்றி கழகத்தை விமர்சிப்பதில் தான் ஆர்வம் காட்டுகிறார் சீமான். தன்னிடம் இருக்கும் 8 சதவீத வாக்குக்கும் வேட்டுவைத்து விடுவாரோ விஜய் என்ற பயத்தில் தான் சீமான் வரம்பு மீறி பேசி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய புள்ளிகள்.
தமிழ் சினிமாவில் இருந்து அரசியலுக்கு நடிகர்களும் இயக்குனர்களும் வருவது புதிதல்ல. கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா தொடங்கி சீமான், விஜய் வரை சினிமா பின்னணியில் இருந்து வந்தவர்கள் தான். அந்த வகையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்கப் போகிறார்.
அதற்கான முன்னோட்டமாக மதுரையில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று நடைபெற இருக்கிறது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. மாநாடு மாலையில் என்றாலும் தற்போதிலிருந்தே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டு மேடையில் குவிந்து வருகின்றனர்.

தவெக மதுரை மாநாடு
இது ஒரு புறம் இருக்க சமூக வலைதளங்களில் தவெக மாநாடு குறித்த பதிவுகள்தான் அதிகம் இடம் பெற்று இருக்கிறது. எதிர்ப்பாகவோ அல்லது ஆதரவாகவோ எப்படி எனினும் தவெக மாநாடு குறித்து தான் அதிகமான பதிவுகளை பார்க்க முடிகிறது. குறிப்பாக திமுகவினர், நாம் தமிழர் கட்சியினர் பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்களில் மாநாட்டு தொடர்பாக வீடியோக்களையும் விமர்சனங்களையும் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
தவெக 2ஆவது மாநில மாநாடு.. டோல்கேட்டை உடைத்துக்கொண்டு பாய்ந்த விஜய் ரசிகர்கள்.. ஷாக் வீடியோ
நாம் தமிழர்
குறிப்பாக சொல்லப்போனால் திமுகவை விட நாம் தமிழர் தம்பிகள் தான் மாநாட்டை அதிகமாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு காரணம் நடிகர் விஜய்யை கடந்த சில தினங்களுக்கு முன்பு சீமான் விமர்சித்தது தான் என்கின்றனர். புலி வேட்டைக்கு போகும் போது அணில் குஞ்சுகள் வருகிறது, கொள்கை என்ன எனக் கேட்டால் தளபதி என கத்துகிறார்கள். 'டிவிகே டிவிகே' என்பது 'டி விக்க டி விக்க' என கேட்கிறது என காட்டமாக விமர்சித்து இருந்தார் சீமான். விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு எதிரணியில் நின்றாலும் என் தம்பி.. தமிழன் என்ற முறையில் விஜய் வரவேற்கிறேன் என பேசியிருந்தார்.
விஜய்
ஆனால், விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு கூடிய கூட்டத்தை பார்த்து சற்றே மிரண்டு போய்விட்டதாக குற்றம் சாட்டுகின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர். மேலும் தற்போது நாம் தமிழர் கட்சிக்கு எட்டு சதவீத வாக்கு வங்கி இருக்கும் நிலையில் இதுவரை ஒரு எம்எல்ஏ சீட்டை கூட ஜெயிக்க முடியவில்லை என்ற விமர்சனமும் இருக்கிறது. முதன் முறையாக மாநில கட்சி என்று அங்கீகாரத்தை நாம் தமிழர் கட்சி பெற்றிருக்கும் நிலையில் அக்கட்சியில் இருப்பவர்கள் பெரும்பாலும் 20 வயது முதல் 40 வயது வரையிலான இளைஞர்கள் தான்.
சீமான் குற்றச்சாட்டு
சாதாரணமாகவே ஒரு பிரபலம் அரசியலுக்கு வரும்போது இளைஞர்களின் வாக்கு பெருவாரியாக அவர்களுக்குச் சொல்லும். சீமான், விஜயகாந்த், கமலஹாசன் ஆகியோரை இதற்கு உதாரணமாக காட்டலாம். அந்த வகையில் விஜய் அரசியலுக்கு வந்திருக்கும் வகையில் நாம் தமிழர் வாக்கு வங்கி கடுமையாக சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை திமுக, அதிமுக முதல் இரு இடங்களில் இருக்கும் நிலையில் மூன்றாவது இடத்தை பெற பாஜக நாம் தமிழர் தீவிரமாக முயன்று வருகிறது. அந்த இடத்தை விஜய் பெற்று விடுவாரோ என்ற பதட்டமே விஜய் குறித்து சீமான் பேசுவதற்கு காரணம் என்கின்றனர்.
திமுக விமர்சனம்
மேலும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை திமுக கடுமையாக விமர்சித்து வந்த சீமான் தற்போது முதல்வரை சந்தித்த பிறகு சற்றே அடக்கி வாசிக்கிறார் என்பதை சுட்டிக்காட்டும் தமிழக வெற்றி கழகத்தினர், அடிபட்டு செத்துப் போவ என்பதெல்லாம் என்ன மாதிரியான விமர்சனம். ஏற்கனவே இது போன்ற தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்த சீமானிடம், தற்போது விமர்சனம் வந்திருப்பதெல்லாம் சாதாரணம் தான் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications