விஜய்க்கே தெரியாமல்.. மாட்டுக்கொட்டகையில் ரேஞ்ச் ரோவர்.. கொங்கு தவெக அமைச்சர் மெகா வசூல்
சென்னை: மாற்றம், நேர்மை, தூய்மை என்றெல்லாம் கூறிவிட்டு ஆட்சிக்கு வந்த தவெகவில்.. அக்கட்சி அமைச்சர் ஒருவரே கடுமையாக வசூலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. அதிலும் அந்த அமைச்சர் ரேஞ்ச் ரோவர் எல்லாம் வாங்கி உள்ளதாக உருகார் எழுந்துள்ளது.
தொழில்துறை மண்டலமான கொங்குப் பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய தவெக அமைச்சர் ஒருவர் மீது வைக்கப்பட்டு உள்ள இந்த சொகுசு கார் புகார், தலைமைக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
சாயப்பட்டறை உரிமையாளர்களிடம் நடந்த ரகசிய வசூல் வேட்டை
கொங்கு மண்டலத்தின் திருப்பூர் மற்றும் ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதிகள் ஜவுளி மற்றும் சாயப்பட்டறைத் தொழிலுக்குப் பெயர் பெற்றவை. சுற்றுச்சூழல் விதிகள், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நடைமுறைகள் என எப்போதும் பல்வேறு நிர்வாகச் சோதனைகளை எதிர்கொள்ளும் இந்த நிறுவனங்களைக் குறிவைத்து, சமீபகாலமாகத் திட்டமிட்ட வசூல் வேட்டை நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரின் ஆதரவாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மூலம் பல கோடி ரூபாய் அளவுக்கு வசூலிக்கப்பட்ட நிதி, முறைகேடாகத் திரட்டப்பட்டதாக தொழில்முனைவோர் மத்தியில் அதிருப்தி புகைந்து வருகிறது.
மனைவியின் உறவினர் பெயரில் ரேஞ்ச் ரோவர் பதிவு
தொழிலதிபர்களிடம் இருந்து திரட்டப்பட்ட இந்த தொகையைக் கொண்டு, பல கோடி ரூபாய் மதிப்பிலான அதிநவீன ரேஞ்ச் ரோவர் சொகுசு கார் அந்த அமைச்சர் மூலம் வாங்கப்பட்டுள்ளது. எனினும், சொத்து கணக்கு விவரங்கள் மற்றும் வருமான வரி, லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனைகளுக்கு அஞ்சி, அமைச்சர் தன் சொந்தப் பெயரிலோ அல்லது நேரடி குடும்பத்தினர் பெயரிலோ அந்த வாகனத்தைப் பதிவு செய்யவில்லை.
அதற்குப் பதிலாக, தனது மனைவியின் நெருங்கிய உறவினர் ஒருவரின் பெயரில் காரைப் பதிவு செய்துள்ளார். புதிதாக வாங்கிய உலகத்தரம் வாய்ந்த சொகுசு காரில் வலம் வர அமைச்சர் மிகுந்த ஆர்வம் காட்டியபோதிலும், இந்த விவரம் வெளியில் கசிந்தால் கட்சித் தலைமையின் கோபத்திற்கும் எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களுக்கும் ஆளாக நேரிடும் என்ற பயம் அவரைத் தொற்றிக்கொண்டது.
]மாட்டுக்கொட்டகையில் அடைக்கலம் புகுந்த பல கோடி கார்
பொதுமக்களின் கண்களில் படாமல் இருப்பதற்காகவும், உளவுத் தகவல்கள் கசிவதைத் தடுப்பதற்காகவும் அந்த விலையுயர்ந்த கார், அமைச்சரின் மனைவியின் உறவினருக்குச் சொந்தமான தொலைதூர கிராமப்புற தோட்டத்து வீட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது. அங்குள்ள ஒரு பழைய மாட்டுக்கொட்டகையில், தார்பாய் மற்றும் வைக்கோல் போர்களுக்கு இடையே மறைத்து நிறுத்தப்பட்டுள்ளது. பல கோடிகள் மதிப்புள்ள நவீன தொழில்நுட்ப வாகனம், சாண வாடை வீசும் கிராமத்து மாட்டுக்கொட்டகையில் முடங்கிக் கிடக்கும் செய்தி தற்போது மாவட்டக் கட்சித் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பும்... அமைச்சரின் முரண்பாடும்
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கட்சிக் கூட்டத்திலும் பொதுவெளியிலும் பேசிய முதலமைச்சர் விஜய், எங்கள் கட்சியின் பல எம்.எல்.ஏ-க்கள் எளிய பின்னணியில் இருந்து வந்தவர்கள்; தொகுதிப் பணிகளை மேற்கொள்ள போதுமான வாகன வசதிகள் கூட இல்லாமல் சிரமப்படுகின்றனர். அவர்களின் பொதுப் பணிக்காக அரசே புதிய கார்களை வாங்கித் தரும்.. என்று வெளிப்படையாக அறிவித்திருந்தார்.
அதோடு சட்டசபையில் உள்ள எல்லா எம்எல்ஏக்களுக்கும் கார் வாங்கி தருவோம் என்றும் கூறினார். ஆனால் திமுக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களுக்கு கார் வேண்டாம் என்று கூறி உள்ளனர். விஜய் கார் வாங்கி தரும் நேரத்தில் அவரின் கட்சியினர் ஒருவரே முறைகேடு செய்து கார் வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே நூல் விலை உயர்வு, மின்கட்டண சுமை மற்றும் ஏற்றுமதி மந்தநிலையால் தத்தளிக்கும் கொங்கு மண்டலத் தொழில்முனைவோருக்கு, இத்தகைய மறைமுக வசூல்கள் கூடுதல் சுமையாக மாறியுள்ளன. இந்த விவகாரம் மாவட்ட எல்லைகளைத் தாண்டி கட்சியின் உயர்மட்டத் தலைமை வரை எட்டியுள்ளதாகவும், விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications
