அடிக்கடி நீக்கப்படும் தவெக அமைச்சர்களின் வார்த்தைகள்.. சட்டசபையில் இதுபோல ஈஸியாக நடந்ததே இல்லை!
சென்னை: ஆளும் கட்சி அமைச்சர்களின் பேச்சையே, சட்டசபை அவைக் குறிப்பிலிருந்து நீக்கும் நிலைமை தவெக அரசில் தொடர் கதையாகி வருகிறது. மக்கள் மத்தியில், இந்த ஆட்சி நிர்வாகம் குறித்த கேள்விக்குறியை ஏற்படுத்துவதாக இது அமைந்துள்ளது.
சபாநாயகருக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவைக்குள் பேசுவது ஈஸியாக நடக்காது. ஆனால் அதுவும் இந்த அரசில் அன்றாற நிகழ்வு போல மாறி வருகிறது. பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவாக இருக்கலாம், நிதியமைச்சர் மரிய வில்சனாக இருக்கலாம் பலரும் சபாநாயகர் சொல்வதை உரிய வகையில் பின்பற்றாமல் பேசியதை லைவ் நிகழ்வில் மக்கள் பார்த்துள்ளனர்.

1991-96 வரையிலான ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சி காலம் முடிந்து, 1996ம் ஆண்டு, திமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த நேரம் அது. பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அப்போது சபாநாயகராக பதவி வகித்தார். திமுக அமைச்சர் ஆலடி அருணா, அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ஜெயலலிதா குறித்து கடும் வார்த்தைகளை பிரயோகித்தார். அதை சபாநாயகர் அவைக் குறிப்பிலிருந்து நீக்கினார். அதுதான் தவெக ஆட்சிக்கு வரும்முன்பு கடைசியாக ஒரு அமைச்சர் பேச்சு அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் என்கிறார்கள் மூத்த பத்திரிக்கையாளர்கள்.
ஆனால் தற்போதைய சட்டசபையில் நாள்தோறும் இதுபோன்ற சம்பவம் அரங்கேறி வருகிறது. 4 நாட்கள் முன்பாக ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்து, 3 நாட்கள் முன்பாக மற்றொரு அமைச்சர் நிர்மல் குமார் கூறிய கருத்துக்கள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன. அமைச்சர் வன்னியரசு, இன்று, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா பற்றி பேசிய கருத்தை நீக்க வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனாவே கோரிக்கை விடுத்துள்ளார்.

சபாநாயகர்-அமைச்சர்கள் இடையே இருந்த அவைக்குறிப்பு நீக்க விவாதம் இப்போது அமைச்சர்கள் இடையேயும் இடம் பெயர்ந்துள்ளது. சபாநாயகர் சார்பு இல்லாதவராக அவையை நடத்துவது என்பது நல்ல விஷயம்தான், ஆனால் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் பார்வையில், தங்கள் அமைச்சர்கள் அனுபவமின்றி பேசுவதால்தான் சபாநாயகர் தலையிடும் நிலை வருகிறது என்ற பேச்சு உள்ளது.
விஜய் முதல்வரான பிறகு, வீட்டில் சீரியல் பார்க்கும் நேரத்தில் கூட சட்டசபை லைவ் பார்க்க ஆரம்பித்துவிட்டனர் பொது மக்கள். அவர்கள் மத்தியில் இந்த அரசு பற்றி என்ன மாதிரி அபிப்ராயம் பதிவாகும் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டு இருந்த நேரத்தில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ரமேஷ் பேசிய பேச்சு ஒன்றை சபாநாயகர் அவை குறிப்பில் இருந்து நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
