விசில் சின்னத்துக்கு தானே ஓட்டு போட்டீங்க.. திமுக கவுன்சிலர்கள் பிரச்சனை. தவெக எம்எல்ஏ புகார்
சென்னை: தவெக ஆட்சியமைத்து 3 மாதங்களாகிவிட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் திமுக பெரும்பாலான இடங்களில் இருப்பதால் தவெக எம்எல்ஏக்களுடன் மோதல் ஏற்படுகிறது. கவுன்சிலர்கள் தடை செய்வதால் மக்கள் பணி செய்ய முடிவதில்லை என அமைச்சர்களே புலம்புகிறார்கள். இந்நிலையில் விசில் சின்னத்துக்கு தானே ஓட்டு போட்டிர்கள், அவர்களை கேளுங்கள் என்று மக்களிடம் கவுன்சிலர்கள் பிரச்சனை செய்கிறார்கள் என எம்எல்ஏ ஈசிஆர் சரவணன் கூறியுள்ளார்.
சோழிங்கநல்லூர் எம்எல்ஏ ஈசிஆர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "முதலமைச்சர் நல்லாசியுடன், ஊரக வளர்ச்சி நீர்வளர்ச்சித்துறை அமைச்சர் ஆனந்த் இசிஆர் பகுதி கல்யாணி மெஸ் அருகே பேருந்து நிறுத்தம் திறக்கப்பட்டுள்ளது. இது தற்காலிகமானது தான். இந்த பகுதியில் ஒரு ஆக்கிரமிப்பு உள்ளது. அதை அகற்றிவிட்டு என்னுடைய எம்எல்ஏ நிதியில் பெரிய பேருந்து நிறுத்தம் கட்டப்படும். மெட்ரோ ரயில் பாலம் வேலை முடிந்த இடத்தில் வடிகால் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது.

2 மணி நேரம் தூக்கம்
பாண்டியன் சாலையில் செப்டம்பர் இறுதிக்குள் பாலம் திறக்கப்படும். அங்கு ஏராளமான ஐடி நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளன. துரைப்பாக்கம் முதல் நீலாங்கரை வழித்தடத்தில் அதுதான் முக்கியமான பாலம். தற்போது இரவு பகலாக பணி நடந்து வருகிறது. சாலை விரிவாக்கத்துக்காக நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றுள்ளனர். அதனால் தான் பேருந்து நிறுத்த பணிகள் நின்றுள்ளன. அது முடிந்தவுடன் மக்களுக்கு பயனுள்ள வகையில் பேருந்து நிறுத்தம் திறக்கப்படும்.
சோழிங்கநல்லூர் தமிழகத்திலேயே மிகப்பெரிய தொகுதி. சாலை, நீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. இரவும் பகலுமாக வேலை செய்கிறோம். நான் ஒரு நாளுக்கு 2 மணி நேரம் தான் தூங்குகிறேன். மற்ற நேரம் தொகுதி மக்களுக்கான வேலையை பார்க்கிறேன். மாநகராட்சி, குடிநீர் வாரியம், மெட்ரோ நிர்வாக அதிகாரிகளுடன் பேசி உடனுக்குடன் பிரச்சனைகளை சரி செய்ய முயற்சிக்கிறோம்.
திமுக கவுன்சிலர்களால் பிரச்சனை
உள்ளாட்சித்துறையில் உள்ள கவுன்சிலர்கள் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். எங்களை வேலை செய்ய விடுவதில்லை. விசில் சின்னத்துக்கு தானே ஓட்டு போட்டிர்கள், அவர்களை கேளுங்கள் என்று மக்களிடம் பிரச்சனை செய்கிறார்கள். அவர்களும் மக்கள் பிரநிதிகள் தானே. அவர்கள் வானத்தில் இருந்து பிறக்கவில்லை. உள்ளாட்சியில் எந்த குறையை சொன்னாலும் கேட்பதில்லை. மக்களிடம் அனுசரித்து போக வேண்டும். தேவையில்லாத வார்த்தைகளை விடுகிறார்கள். இன்னும் 6 மாதங்கள் தான்.
எல்லாம் மாறும். புழுதிவாக்கத்தில் உள்ள 10 பேர் திமுகவில் இணைந்துள்ளதாக கூறுகிறார்கள். அந்த 10 பேர் தேர்தல் நேரத்தில் எங்கள் கட்சியில் இணைவதாக துண்டு போட்டனர். அவர்கள் எங்கள் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை. அரசியல் அவதூறு செய்வதற்காக எங்கள் கட்சி நிர்வாகிகள் என்று பொய் சொல்கிறார்கள். இது திமுகவின் சதி. வருகிற உள்ளாட்சி தேர்தலில் தவெக வெற்றி பெற்று இன்னும் சிறப்பான வகையில் மக்கள் பணியை தொடர்வோம்" என்றார்.


Click it and Unblock the Notifications
