மூச்சு திணறல்.. தொடர் சிகிச்சை.. தவெக எம்எல்ஏ விஎஸ் பாபு உடல்நிலை எப்படி இருக்கு? வெளியான ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினராக உள்ள வி.எஸ். பாபு, சுவாச கோளாறு காரணமாக கடந்த 9ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை வீழ்த்தி மிக பெரிய அதிர்ச்சி கொடுத்தவர் வி.எஸ். பாபு. கொளத்தூர் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் பாபு, நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரிலும் கலந்து கொண்டார்.

TVK MLA VS Babu

வி.எஸ். பாபு

இதற்கிடையே 75 வி.எஸ். பாபுவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஐசியூவில் தீவிர மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்.

சுவாச பிரச்சினைக்காக சிறப்பு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை கொடுத்து வருகிறார்கள். ஏற்கனவே அவரது உடல்நிலை சீராக இருப்பதாக நேற்றைய தினம் மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை வெளியாகி இருந்தது. இருப்பினும், அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்தார். இதற்கிடையே இன்று (செப்டம்பர் 11) அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் புதிய செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

செய்திக்குறிப்பு

மருத்துவமனை வெளியிட்ட அந்த அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், "சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு சுவாச கோளாறு காரணமாக கடந்த 9ஆம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. தகுந்த மருத்துவப் பராமரிப்பின் கீழ் அவர் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறார்" என கூறப்பட்டுள்ளது.

மருத்துவர் தகவல்

முன்னதாக நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று (செப்டம்பர் 10) மருத்துவமனைக்கு நேரில் சென்று விஎஸ் பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மரிய வில்சன், வி.எஸ். பாபு நலமுடன் உள்ளதாகவும் முதலமைச்சர் விஜய் தொலைப்பேசி வாயிலாக அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில் தான் மருத்துவமனை தரப்பில் இருந்து இப்போது மீண்டும் ஒரு செய்திக்குறிப்பு வெளியாகி இருக்கிறது. வி.எஸ். பாபுவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்களின் கண்காணிப்பு மற்றும் சிகிச்சையின் கீழ் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓரிரு நாட்கள் மருத்துவ கண்காணிப்பிற்கு பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிகிறது.

யார் இந்த விஎஸ் பாபு

தனது அரசியல் வாழ்க்கையை திமுகவில் தொடங்கிய விஎஸ் பாபு, வடசென்னை திமுகவில் முக்கிய நிர்வாகியாக இருந்தார். 2006 சட்டசபை தேர்தலில், புரசைவாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு முதன்முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016ம் ஆண்டு அவர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அங்கும் இவருக்கு பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து பிப்ரவரி 2026ல் விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்தார்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளராக களம் இறங்கிய வி.எஸ்.பாபு, யாருமே எதிர்பார்க்காத வகையில் ஸ்டாலினை வீழ்த்தினார். 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலினை தோற்கடித்து மாபெரும் வெற்றியைப் பெற்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+