நைட்டு தாண்ட மாட்ட.. கொதித்த தவெக எம்.எல்.ஏ சபரி ஐயங்கரன்.. சொந்த உறவினருக்கே பகிரங்க மிரட்டல்
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்கரன், தனது உறவினர் ஒருவருடன் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுக்கும் வகையிலான ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மிரட்டல் விடுக்கும் வகையில் அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் தனிப்பட்ட மற்றும் அரசியல் சார்ந்த பதிவை அந்த உறவினர் வெளியிட்டதே இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

பெரியகுளம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவர் சபரி ஐயங்கரன். அவரது உறவினர் ஒருவர் தனது சமூக வலைதள வாட்ஸ்அப் பக்கத்தில் சபரியின் குடும்பப் பின்னணி, கலப்புத் திருமணம் தொடர்பான கருத்துக்களைக் குறிப்பிட்டு ஸ்டேட்டஸ் வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதைப் பார்த்த சபரி ஐயங்கரன், கோபம் அடைந்து, உடனடியாகத் அந்த உறவினரைத் தொலைபேசியில் அழைத்து நேரடியாகக் கண்டித்துள்ளார்.
தொலைபேசி உரையாடலின் தொடக்கத்திலேயே, "எந்த தைரியத்தில் இப்படி ஒரு ஸ்டேட்டஸை வைத்தீர்கள்? என் குடும்ப விவகாரத்தை பொதுவெளியில் இழுக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?" எனக் கொதித்துப் பேசியுள்ளார். அதற்கு அந்த உறவினர், "நான் பொதுவான வரலாற்றுத் தகவலாக, திராவிடம் கொண்டு வந்த கலப்புத் திருமணம் பற்றித்தானே பதிவிட்டேன்; உங்களை நேரடியாகக் குறிப்பிடவில்லையே" என்று சமாதானம் செய்ய முயன்றார்.
உன்னை உடனே தூக்கிருவேன் | பெரியகுளம் எம்.எல்.ஏ கொலை மிரட்டல் | சபரி ஐங்கரன் | https://t.co/byNiQjxoYh pic.twitter.com/iLtkV9j7d6
— Duraimurugan (@Saattaidurai) August 21, 2026
ஆத்திரமடைந்த சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்கரன்
ஆனால், இதனால் மேலும் ஆத்திரமடைந்த சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்கரன், "பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ யார் என்று அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது குடும்ப விவகாரத்தை மறைமுகமாகப் பேசி சீண்டுவதை அனுமதிக்க முடியாது. உங்கள் தந்தை மீது நான் வைத்துள்ள மரியாதை மட்டுமே என்னை அமைதியாக இருக்க வைக்கிறது. அந்த மரியாதையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். இல்லையென்றால் காவல் நிலையம் மூலம் நடவடிக்கை எடுத்து, டி.எஸ்.பி மற்றும் இன்ஸ்பெக்டரை உங்கள் வீட்டிற்கே அனுப்பி ஜெயிலில் உங்களைஉட்கார வைத்துவிடுவேன். இன்றிரவுக்குள் அந்த ஸ்டேட்டஸை நீக்கவில்லை என்றால் விளைவுகள் கடுமையாக இருக்கும்" என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
மேலும் அந்த உரையாடலில், அரசியல் ரீதியான கட்சி மாறுதல்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் விவகாரம் குறித்தும் இருவரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசியுள்ளனர். இறுதியில், "குடும்ப சூழலையும் உறவையும் மனசில் வைத்து உடனடியாகப் பதிவை நீக்குங்கள்" என சபரி ஐயங்கரன் கண்டிக்க , உறவினரும் "பதிவை நீக்கிவிட்டுப் பேசுகிறேன்" எனத் தெரிவிப்பதுடன் அந்த ஆடியோ முடிகிறது.
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு மாற்றாகத் தூய்மையான அரசியல் செய்யப்போவதாக கூறி களமிறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் இளம் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், குடும்ப உறவினரிடமே காவல் துறையை வைத்து நடவடிக்கை எடுப்பேன் என ஆவேசமாகப் பேசியிருப்பது இணையத்தில் கடுமையான விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக தவெக தலைமை மற்றும் சபரி ஐயங்கரன் தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த ஆடியோவில் இருப்பது அவர்தானா என்பதும் உறுதி செய்யப்படவில்லை.


Click it and Unblock the Notifications
