“சுயநலனுக்காக ஊழல் கூடாரத்தில் இளைப்பாறுகிறார்”.. கமல்ஹாசன் கருத்துக்கு தவெக கொடுத்த பதில்!
சென்னை: "ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு" எனத் தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனின் கருத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அக்கட்சியின் இணை செய்தி தொடர்பாளர் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டு 8 ஆம் ஆண்டு விழாவில் உரையாற்றிய கமல்ஹாசன், "ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என்பது, என் அனுபவத்தில் தெரிந்து கொண்டது. நான் தோல்வி அடைந்த அரசியல்வாதி என பலரும் விமர்சிக்கின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வரத் தவறியதைத்தான் என்னுடைய தோல்வியாக நான் பார்க்கிறேன். அப்படி வந்திருந்தால், நான் பேசும் பேச்சும், இருக்கும் இடமும் வேறாக இருந்திருக்கும்" எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என தெரிவித்த கமல்ஹாசனின் கருத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அக்கட்சியின் இணை செய்தித் தொடர்பாளர் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார். எம்ஜிஆரை போன்று ரசிகர்களை வாக்காளர்களாக மாற்றி விஜய் வெற்றி பெறுவார் என அவர் தெரிவித்துள்ளார்.
ஊழல் கூடாரத்துக்கு எதிராக வீர வசனம் பேசிய கமல், இன்று அதே கூடாரத்தில் சுயநலனுக்காக இருக்கிறார். ஓய்வு காலத்தில் அரசியலுக்கு வந்துவிட்டு, பிக் பாஸ் பணிகளை செய்து வந்தால் கமலுக்கு இந்த நிலைமைதான் ஏற்படும். எம்ஜிஆர் வெற்றியை சிவாஜியால் பெற முடியவில்லை, எம்.ஜி.ஆர் போன்று ரசிகர்களை வாக்காளர்களாக விஜய் மாற்றுவார்" எனத் தெரிவித்துள்ளார் தவெக ரமேஷ்.
தவெக இணை செய்தித் தொடர்பாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், "பல்லாண்டு காலமாக ரசிகராக இருந்து அதிதீவிரமாக அரசியல்மயப்படுத்தப்பட்ட ஒரு தொண்டனாக, தோழனாக சில விடயங்களை சொல்ல விரும்புகிறேன். இவ்வளவு நாளாக ஒருவர் பேசியது தான் மக்களுக்கு புரியவில்லை என்றால் இப்போது அவர் யார், எதற்காக வந்தார் என்பது அவருக்கே புரியாமல் பேசி வருகிறார். அவர் யாரென்று நேரடியாக சொல்ல வேண்டிய அவசியமில்லை சொல்லாமலே மக்களுக்கு புரியும்.
ரசிகர்களும், மக்களும் வாக்காளர்களாக மாறுவது அந்த நடிகரின் மக்கள் செல்வாக்கு, தலைசிறந்த கொள்கைகள், தமிழ்நாடு சார்ந்த அரசியல் முன்னெடுப்பு, மக்கள் நலன் சார்ந்த பணிகள் ஆகியவற்றை சார்ந்தது. ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என்று திடீரென போதி மரம் அடியில் அமர்ந்து ஞானம் பெற்றது போல் அறிவாலயத்தில் கலந்து கரைந்த பின் பேசி வருகிறார்கள்.
எம்ஜிஆர் ரசிகர்கள் வேறு, சிவாஜி ரசிகர்கள் வேறு., ரஜினி ரசிகர்கள் வேறு., மற்ற ரசிகர்கள் வேறு. எங்கள் தலைவரின் ரசிகர்கள் வேறு! எம்ஜிஆர் அவர்களின் அரசியல் வெற்றியை சிவாஜி பெற முடியவில்லை. எம்ஜிஆர் தனது ரசிகர்களை அரசியல்மயப்படுத்தி வாக்காளர்களாக்கியது போல எங்கள் தலைவர் கோடிக்கணக்கான ரசிகர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களையும் எப்படி வாக்காளர்களாக மாற்றுகிறார் என்பதை பாருங்கள். ஒருவரது செயல்பாடுகள் தான் வெற்றியையும் தோல்வியையும் நிர்ணயம் செய்யும்.
எந்த ஊழல் கூடாரத்துக்கு எதிராக தொலைக்காட்சி பெட்டியை எல்லாம் உடைத்து வீர வசனம் பேசி வந்தார்களோ, இன்று அதே ஊழல் கூடாரத்தில் சுயநலனுக்காக இளைப்பாறிக் கொண்டு அவர்களுக்காக டப்பிங் பணிகள் செய்து வருகிறார்கள்.
மக்களுக்காக மக்களை நம்பி உழைத்தால் என்றுமே மக்கள் ஆதரிப்பார்கள். பணி ஓய்வு காலத்தில் அரசியலுக்கு வந்துவிட்டு பிக் பாஸ் பணிகளை செய்து வந்தால் இந்த நிலைமை தான் ஏற்படும் என்பதை உணர வேண்டும். இனியாவது ஆளும் பிக் பாஸ்களுக்காக உழைக்காமல் மக்களுக்கு உண்மையாக உழையுங்கள்! பொது நலத்துடன் உழையுங்கள்!!" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications