"எடப்பாடியை நம்பி யாரும் கூட்டணிக்கு வர்றமாதிரி தெரியல".. கிண்டல் செய்த ஆதவ் அர்ஜுனா! சர்ச்சை வீடியோ
சென்னை: எடப்பாடி பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணிக்கு வரத் தயாராக இல்லை என்று தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் கிண்டல் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் விடுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், +2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. முன்னதாக, தனியார் விடுதியில் தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

அப்போது, இருவரும் உரையாடியபடியே நடந்து செல்லும் காட்சி துணுக்கு ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது அதில், பாஜகவே அதிமுகவை கூட்டணியில் இருந்து விலக்கிவிடும் என்றும், எடப்பாடி பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணி வைக்க முன்வரவில்லை என்றும் சிரித்தபடியே ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
அண்ணாமலையாவது 10 பேரை கூட வச்சிக்கிட்டு, தேர்தல்ல நின்னு 18 சதவீத ஓட்டு வாங்கினார். ஆனால் எடப்பாடியை நம்பி எவனும் கூட்டணிக்கு வர மாதிரி தெரியவில்லை என்று ஆதவ் அர்ஜூனா பேசி உள்ளதாக அந்த வீடியோவில் தெரிகிறது. இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
'எடப்பாடியை நம்பி எவனும் கூட்டணிக்கு வரமாதிரி தெரியல'
— [email protected] (@Pmurugadossmah1) May 31, 2025
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசிய தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளரா் ஆதவ் அர்ஜுனா! pic.twitter.com/wXPdRtBMKQ
அதிமுக, தவெக கூட்டணி தொடர்பாக முன்பு பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால், அதன்பிறகு பாஜக - அதிமுக கூட்டணி உறுதியாகிவிட்டது. இருப்பினும் அந்தக் கூட்டணிக்குள் தவெக-வை இணைக்க முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா கிண்டல் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, சென்னை ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்றும், நேற்று முன்தினமும் நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பற்றி விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது.












Click it and Unblock the Notifications