அடுத்த 2 வருஷத்துக்கு.. தவெகவிலிருந்து ஒரு எம்பி கூட வர முடியாது! காரணம் இதுதான்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கிறது. ஆட்சியமைக்க 118 எம்எல்ஏக்கள் தேவை என்கிற நிலையில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் என்னதான் இவ்வளவு எம்எல்ஏக்கள் இருந்தாலும், தவெகவிலிருந்து அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஒரு எம்பி கூட வர முடியாது என்று சொல்லப்படுகிறது.
தமிழக அரசியல் நிலவரப்படி அடுத்த 2 ஆண்டுகளுக்கு (2026 மற்றும் 2027) தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு புதிய உறுப்பினர்கள் செல்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.

ஏனெனில், தமிழகத்தில் காலியாக இருந்த 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 2026-ல் (சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே) நடந்து முடிந்துவிட்டது. இதில், திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் மாணிக்கம், தேமுதிக சார்பில் எல்.கே. சுதீஷ், அதிமுக சார்பில் தம்பிதுரை, பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். இவர்கள் ஏப்ரல் 2026 முதல் தங்கள் 6 ஆண்டுகாலப் பதவிக்காலத்தைத் தொடங்கியுள்ளனர்.
மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். தமிழகத்தின் மொத்தமுள்ள 18 இடங்கள், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 6 இடங்கள் என சுழற்சி முறையில் காலியாகும். இப்போது 6 இடங்கள் நிரப்பப்பட்டு விட்டதால் அடுத்து 2028ல்தான் இந்த இடங்கள் காலியாகும். 2027-ஆம் ஆண்டில் தமிழகத்திலிருந்து எந்த ஒரு மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக்காலமும் முடிவடையாது. இதனால் அந்த ஆண்டில் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை.
தற்போதைய சூழலில் தமிழக வெற்றி கழகம் நாடாளுமன்றத்திற்கு (டெல்லிக்கு) தனது பிரதிநிதிகளை அனுப்ப இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன.
1. மாநிலங்களவை
2. மக்களவை
மாநிலங்களவையை பொறுத்தவர, 2028-ல் 6 இடங்கள் காலியாகும்போது, தவெக சட்டமன்றத்தில் பெற்றுள்ள பலத்தைப் பொறுத்து (MLA-க்களின் எண்ணிக்கை) தனது வேட்பாளரை மாநிலங்களவைக்கு அனுப்ப முடியும். தற்போது 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருப்பதால் 2028ல் மாநிலங்களவைக்கு 3 எம்பிக்களை அனுப்ப முடியும். கூட்டணி கட்சிகளின் ஆதரவு இருந்தால் 4 எம்பிக்கள் வரை அனுப்பலாம்.
மக்களைவையை பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் உறுப்பினர் மரணம் அல்லது ராஜினாமா காரணமாக இடைத்தேர்தல் வந்தால், அதில் தவெக போட்டியிட்டு வென்றால் நேரடியாக நாடாளுமன்றம் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications