வெகுவிரைவில் 'அமைச்சர் சௌமியா அன்புமணி'.. பாமக நிர்வாகியின் அந்த பேச்சு.. ரசித்து கேட்ட அண்ணியார்!
சென்னை: வெகுவிரைவில் செளமியா அன்புமணி அமைச்சராக வேண்டும் என்பதே ஆசை என்று பாமக நிர்வாகி பேசியுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. அந்த பேச்சை அருகில் இருந்த செளமியா அன்புமணி சிரித்து கொண்டே ரசித்தார். இதனால் தவெக கூட்டணியில் பாமக இணைகிறதா என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது.
சட்டசபைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்ற நிலையில், காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்து அமைச்சரவையில் இணைந்தன. அதேபோல் சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இரு கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்தன. மைனாரிட்டி ஆட்சி என்பதால், தவெக முன்னெச்சரிக்கையாக அதிமுக எம்எல்ஏ-க்களை தங்கள் பக்கம் இழுத்து வருகிறது.

ஏற்கனவே அதிமுகவை சேர்ந்த 6 எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டனர். இதனிடையே விசிகவை கூட்டணியில் வைத்து கொண்டே, தவெக அமைச்சர்கள் பாமக உடன் நெருக்கம் காட்டி வருகின்றனர். தலைமைச் செயலகத்திற்கு அன்புமணி வந்த போது, அமைச்சர் ஆனந்த் அவரை காரில் இருந்து வரவேற்றார். அங்கும் சென்று தன்னுடைய சேரில் அமர சொன்னார்.
அதேபோல் ஆதவ் அர்ஜுனா உடனும் அன்புமணி நெருக்கம் காட்டி வருகிறார். நீண்ட ஆண்டுகளாகவே கூட்டணி அமைச்சரவையில் பாமக இடம்பெற வேண்டும் என்பதை அன்புமணி வலியுறுத்தி வருகிறார். அதற்கான காலம் கனிந்து வந்த போதும், பாமகவின் ஆதரவை தவெக கோரவில்லை. இருந்தாலும் பாமகவுடன் தவெக தொடர்ச்சியாக நெருக்கம் காட்டி வருகிறது.
இதற்கு ஜான் ஆரோக்கியசாமியும் ஒரு முக்கிய காரணம். ஏனென்றால் தவெகவுக்கு அரசியல் ஆலோசகராக பணியாற்ற தொடங்குவதற்கு முன்பாகவே, அன்புமணிக்காக பணியாற்றி இருக்கிறார். இதனிடையே சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இரு கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு அளித்திருப்பதால், எந்த நேரத்திலும் அவர்கள் ஆதரவை விலக்கக் கூடும்.
இதன் காரணமாகவே பாமகவுடன் தவெக நெருக்கம் காட்டி வருகிறது என்று சொல்லப்படுகிறது. பாமக வசம் 4 எம்எல்ஏ-க்கள் இருக்கும் சூழலில், செளமியா அன்புமணியை அமைச்சராக்க தீவிர பணிகள் நடந்து வருவதாக தெரிகிறது. இப்படியான சூழலில் தான் பசுமைத் தாயகம் சார்பாக மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
அதில் பாமக நிர்வாகி ஒருவர் பேசுகையில், அண்ணியார் செளமியா அன்புமணி விரைவில் அமைச்சராக வேண்டும் என்பதே ஆசை.. அதற்காக வாழ்த்துகிறேன் என்று தெரிவித்தார். இதனை செளமியா அன்புமணி அமர்ந்து சிரித்து கொண்டே ரசித்தார். இதனால் தவெக அமைச்சரவையில் விரைவில் பாமக இணையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இணைந்தால் விசிக அமைச்சரவையில் இடம்பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
