தவெக 3 ஆம் ஆண்டு விழா.. விஜய் தலைமையில் கொண்டாட்டம்.. தொண்டர்களுக்கு என்.ஆனந்த் வெளியிட்ட மெசேஜ்!
சென்னை: தமிழக வெற்றிக் கழக மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா, சென்னை பனையூரில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. தவெக 3ம் ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமான மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் பேசியது அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வரும் சட்டசபை தேர்தலில் முதல் முறையாக களம் காண இருக்கிறது.

தவெக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கரூரில் விஜய் பிரச்சாரத்தில் நடந்த துயரச் சம்பவத்தின் காரணமாக விஜய்யின் பிரச்சாரம் தடைப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விஜய் பிரச்சாரங்களையும், கட்சி நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார். கட்சியின் கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட விஜய் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. தவெக கூட்டணியில் இணைய முன்னணி கட்சிகள் எதுவும் முன்வராத நிலையில் தனித்துக் களம் காண அக்கட்சி தயாராகி வருகிறது. தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள 'விசில்' சின்னத்தை வலுவான பிரச்சார ஆயுதமாக மாற்ற விஜய் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் தவெக கட்சியின் 3 ஆம் ஆண்டு தொடக்க விழா பிப்ரவரி 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தவெக தலைவர் விஜய் தலைமையில் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் விழா நடத்தப்படுகிறது. அன்று முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜய் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழக வெற்றிக் கழகம் மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா
கழகத் தோழர்களுக்கு வணக்கம்.
தமிழக அரசியல் களத்தில் மக்களுக்கான முதன்மைச் சக்தியாகத் தமிழக வெற்றிக் கழகம் திகழ்கிறது. கழகத்தை நம் வெற்றித் தலைவர் அவர்கள் ஆரம்பித்து, இரண்டு ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. தற்போது மூன்றாம் ஆண்டு தொடங்குகிறது.
இந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழக மக்களுக்கான நம் தலைவர் அவர்களின் முன்னெடுப்புகள் மிக முக்கியமானவை. ஆனாலும் நாம் கடந்து வந்த பாதை எவ்வளவு கடினமானது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். தன் மீது பேரன்பு கொண்ட மக்களுக்காக, நம் தலைவர் அவர்கள் அத்தனைத் தடைகளையும் எதிர்கொண்டு இன்னும் தீவிரமாகக் களமாடி வருகிறார். நம் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் இலக்கை நோக்கிய வெற்றிப் பயணத்தில் மேலும் அதிக ஈடுபாட்டுடன் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த இனிய தருணத்தைக் கொண்டாட உள்ளோம். நம் வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில் தமிழக வெற்றிக் கழக மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா, சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி, நமது கழகத் தலைமை நிலையச் செயலகத்தில், வரும் 2ஆம் தேதி (02.02.2026, திங்கள்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்களுக்காக உழைத்து, மக்களுடன் மக்களாக இணைந்து நிற்போம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் விரோத ஆட்சியைத் தூக்கி எறிவோம். மாபெரும் வெற்றி பெற்று. நம் வெற்றித் தலைவர் தலைமையில் மனசாட்சி உள்ள மக்களாட்சியை அமைக்க உறுதி ஏற்போம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications