பிரசாந்த் கிஷோரின் படுதோல்வி.. விஜய்க்கு களத்தை புரிய வைத்திருக்கும்.. பத்திரிகையாளர் சுவாமிநாதன்!
சென்னை: பீகார் சட்டசபைத் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் அடைந்துள்ள படுதோல்வி, விஜய்க்கு மிகப்பெரிய புரிதலை கொடுத்திருக்கும் என்று பத்திரிகையாளர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தேர்தல் வியூக வகுப்பாளரை கடந்து கள யதார்த்தத்தை விஜய் புரிந்து கொண்டதால் தான், SIR குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தவெக தரப்பில் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தவெகவுடன் இதுவரை எந்தக் கட்சியும் கூட்டணி அமைக்க செல்லாத நிலையில், டிசம்பர் மாதத்தில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை தொடங்க விஜய் முடிவு எடுத்திருக்கிறார்.

ஆனால் விஜய் இன்னும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கு பயணிக்கவே தொடங்காதது அக்கட்சியினர் மத்தியிலும் அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது. இதனிடையே பீகார் சட்டசபைத் தேர்தலில் தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன்சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் அடைந்துள்ள படுதோல்வி தமிழ்நாட்டிலும் பேசுபொருளாகி இருக்கிறது.
ஏனென்றால் தவெகவின் 2வது ஆண்டு தொடக்க விழாவில் பிரசாந்த் கிஷோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தவெக நிர்வாகிகளை விடவும் தேர்தல் வியூக வகுப்பாளர்களை விஜய் அதிகமாக நம்பி வருகிறார். இதுதொடர்பாக பத்திரிகையாளர் சுவாமிநாதன் பேசுகையில், பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் விஜய்க்கு தான் முக்கிய செய்தி சொல்வதாக தெரிகிறது.
அப்போது பிரசாந்த் கிஷோர் வந்த போது, விஜய்க்காக அவர் வந்திருக்கிறாரே என்ற பிரமிப்பு தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டது. தவெக எப்போதும் வெற்றிபெற்ற மாடலை மட்டுமே முன்னிறுத்தி வந்தது. காமராசர், பெரியார் தொடங்கி 1967 மற்றும் 1977 என்று வெற்றி பெற்ற மாடலை மட்டுமே தவெக தலைவர் விஜய் முன்னிறுத்தினார்.
திமுக, அதிமுக தலைவர்கள் பின்னால் எப்போதும் கட்சி நிர்வாகிகள் மட்டுமே இருப்பார்கள். ஆனால் விஜய்யை சுற்றி மட்டுமே தேர்தல் வியூக வகுப்பாளர்கள் நிற்கிறார்கள். இதனால் பீகார் தேர்தல் முடிவுகள் அரசியல் களம் குறித்த புரிதலை விஜய்க்கு கொடுத்திருக்கும். அந்த புரிதலின் வெளிப்பாடு தான் SIR தொடர்பான வீடியோ. ஆனால் SIR படிவம் கொடுக்க தொடங்கி 10 நாட்களுக்கு பின்னரே விஜய் முழித்திருக்கிறார்.
இன்னும் 10 நாட்களுக்கு பின் தவெக தொண்டர்கள் முழிப்பார்கள். அதற்குள் படிவம் கொடுக்கும் பணிகள் முடிவடைந்துவிடும். இதுதான் கள யதார்த்தம். ஜனநாயகம் என்பது தேர்தலை சந்திப்பதுதான். பிரசாந்த் கிஷோர் செய்த தவறு என்னவென்றால், அவரே தேர்தலில் போட்டியிடவில்லை. தேமுதிக 234 தொகுதிகளில் 232 தொகுதிகளில் வேட்பாளரை நிறுத்தினார்.
தைரியமாக விருத்தாச்சலத்தில் விஜயகாந்த் நின்றார். களத்தில் இறங்கி வெற்றியையும் பெற்றார். அந்த வெற்றிதான் சக வேட்பாளர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும். பிரசாந்த் கிஷோர் போட்டியிடாமல் இருக்கும் போது, அது வெறும் சுயேட்சைகள் போட்டியிடுவதை போல் மாறிவிடும். அதனால் பீகார் தேர்தல் விஜய்க்கு மிகப்பெரிய புரிதலை அளித்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications