அவசரப்பட்டுட்டீங்க அண்ணே.. விஜய் வேலையை காட்டிட்டாரு.. எடப்பாடியிடம் சொன்ன தலைகள்.. போச்சு
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி 2026 சட்டசபை தேர்தலை தனியாக எதிர்கொள்ள.. தனியாக கூட்டணி அமைத்து சந்திக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவு தேர்தல் நேரத்தில் மாறலாம். தேர்தலுக்கு இன்னமும் 6 மாதம் இருக்கிறது. அதற்குள் பல மாற்றங்கள் ஏற்படலாம்.
ஆனால் இப்போதைக்கு விஜய் தனியாக இருக்கிறார். ஏனென்றால் அவரின் கட்சியில் கூட்டணி எதுவும் இல்லை. இப்போதைக்கு அதிமுக கூட்டணியும் வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுத்துவிட்டார். இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அவசரப்பட்டுவிட்டார் என்று எடப்பாடிக்கு நெருக்கமான சிலர் தெரிவித்து வருகிறார்களாம். என்ன நடந்தது?

விஜய் தீர்மானம்
தவெக முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தமிழக வெற்றிக் கழக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கூட்டணி பற்றி முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்படும் என்று தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தவெகவின் இந்த முடிவு அதிமுக தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கோடானு கோடி மக்களின் பேராதரவைப் பெற்று, முதன்மைச் சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் நம் வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில், 2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பது என்றும். தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரத்தைக் கழகத் தலைவர் அவர்களுக்கே வழங்கி, இச்சிறப்புப் பொதுக்குழு ஒப்புதல் அளிக்கிறது., என்று இதில் கூறப்பட்டது.
விஜய்தான் முதல்வர் வேட்பாளர் - எடப்பாடி அப்செட்
விஜய் தலைமையில்தான் தவெக தேர்தலை சந்திக்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவெக முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தமிழக வெற்றிக் கழக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக எடப்பாடி தரப்பை இது பெரிய அளவில் அப்செட் ஆக்கி உள்ளது.
தவெகவின் இந்த முடிவு அதிமுக தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அதிமுக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக எடப்பாடி பழனிசாமி சூசகமாகப் பேசி இருந்தார். குமாரபாளையம் தேர்தல் பரப்புரையில், அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, 'கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே.. இந்த ஆரவாரம் உங்கள் செவியைத் துளைக்கும்' எனக் கூறினார் எடப்பாடி பழனிசாமி.
மேலும் எடப்பாடி பழனிசாமியே.. விஜயின் குரலாக சட்டசபையில் பேசினார். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பேசுகையில், ஒரே இரவில் 39 சடலங்களுக்கு உடற்கூராய்வு (பிரேதப் பரிசோதனை) எவ்வாறு நடத்தப்பட்டது என்றும், ஏன் இவ்வளவு அவசரம் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் சென்று கள்ளச்சாராயத்தில் பலியான நபர்களின் குடும்பங்களை பார்க்காத ஸ்டாலின்.. இங்கு மட்டும் ஏன் சென்றார். அமைச்சர்கள் அங்கு செல்லாத போது இங்கு மட்டும் அமைச்சர்கள் செல்வது ஏன்? என்றெல்லாம் பேசினார்.
அவசரப்பட்டுட்டீங்க அண்ணே
எடப்பாடியிடம் பேசிய அவருக்கு நெருக்கமான நிர்வாகிகள் சிலர்.. கூட்டணிக்கு நாம் காத்திருப்பது போல பேசி இருக்க கூடாது. நீங்க அவசரப்பட்டுட்டீங்க அண்ணே. அதனால்தான் விஜய் இப்போது தன்னை பெரியவர் போல நினைத்துக்கொண்டு கூட்டணிக்கு வர வேண்டாம் என்று நினைக்கிறார். நாம்தான் பெரிய கட்சி. நம்மிடம் கூட்டணி வைக்க அவர்கள்தான் துடிக்க வேண்டும்.
ஆனால் நாம் இறங்கி செல்ல கூடாது. ஆனால் நாம் இறங்கி சென்றுவிட்டோம். இதுதான் பிரச்சனையே. இப்போது பாருங்கள் விஜய் மேலே ஏறி நின்று ஆடுகிறார் என்று கூறி உள்ளார்களாம். விஜய் உடன் கூட்டணி வைக்கும் விஷயத்தில் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டோமே என்றுதான் எடப்பாடி பழனிசாமியும் நினைப்பதாக கூறப்படுகிறது.
முக்கியமாக கரூர் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக அதிமுகவினர் ஊடகங்களில் பேசி வந்தனர். தொடர்ச்சியாக விஜய்க்கு ஆதரவாக பல கருத்துக்களை தெரிவித்து வந்தனர். விஜயை ஆதரிக்க வேண்டும் என்பதற்காக தவெக நிர்வாகிகளை விட கடுமையான கருத்துக்களை அதிமுகவினர் பல ஊடகங்களில் வைத்தனர். விவாதங்களில் பேசினர். இப்போது அவர்கள் அப்படியே விஜய்க்கு எதிராக திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications