அத்தனை வலிகளையும் தாங்கி கொண்டிருக்கிறேன்.. தவெக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் விஜய் உருக்கம்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக -பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகள் தனித்து போட்டியிடவுள்ளது. நாம் தமிழர், அதிமுக, திமுக கட்சிகளை தொடர்ந்து தவெக இன்று வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய விஜய், அத்தனை வலிகளையும் தாங்கிக் கொண்டு உங்களுக்காக மட்டுமே வந்திருக்கிறேன் என்று உருக்கமாக பேசியுள்ளார்.
தவெக சார்பில் பெரம்பூர் தொகுதி மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி ஆகிய இரண்டு தொகுதிகளில் வேட்பாளராக விஜய் போட்டியிடவுள்ளார். தவெக தேர்தல் வாக்குறுதிகளையும் விஜய் அறிவித்துள்ளார். வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பு பேசிய விஜய், "யார் வேட்பாளராக இருந்தாலும் அவர்கள் வேறு, விஜய் வேறு என்று நினைத்துவிட வேண்டாம். மீனவர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், நெசவாளர்கள் ஆகியோருக்கு தனித்தனியாக வாக்குறுதிகள் அறிவிப்போம். (TVK Vijay)

அத்தனை வலிகளையும் தாங்கி
இளைஞர்கள் ஏப்ரல் 23 ஆம் தேதி காலை சீக்கிரமே எழுந்து வாக்காளர் அடையாளத்துடன் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும். உங்கள் குடும்பத்தினரையும் அழைத்து சென்று வாக்கு கேளுங்கள். வெளியூர், வெளி நாடுகளில் உள்ள இளைஞர்கள் தேர்தல் வார நாளில் வருகிறதே என்று நினைக்க வேண்டாம். இப்போதே விமானம், ரயில், பேருந்து டிக்கெட்களை புக் செய்து கொள்ளுங்கள்.
இது ஒரு தலைமுறைக்கான தேர்தல். உங்களுக்கான தேர்தல். எவ்வளவோ வசதி வாய்ப்புகள் இருந்தாலும், எல்லாவற்றையும் தூக்கி வீசிவிட்டு உங்களுக்காக மட்டுமே வந்துள்ளேன். உங்களுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காக மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளேன். அத்தனை வலிகளையும் தாங்கிக் கொண்டு, அத்தனை வலிகளையும் தாங்கிக் கொண்டு உங்களுக்காக மட்டுமே வந்துள்ளேன்.
விசில் புரட்சி தேர்தல்
ஒரு நாளும் பொய் சொல்லி நான் ஏமாற்ற மாட்டேன். 4 முனை போட்டி, 40 முனை போட்டி என்று உருட்டினாலும் தவெக மற்றும் திமுக இடையே தான் தேர்தல் போட்டி. மக்களை விரும்பும் விஜய் வேண்டுமா. மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் வேண்டுமா என்பதுதான் தேர்தல் போட்டியே. உங்கள் விஜய்க்கு, உங்கள் அண்ணனுக்கு, உங்கள் பிள்ளைக்கு தயவு செய்து ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள். இது விசில் புரட்சி தேர்தலாக இருக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications