தயாராகும் ஊழல் பட்டியல்.. அண்ணாமலை பாணியில் அதிரடியை தொடங்கிய தவெக விஜய்
சென்னை: நடிகர் விஜயின் தவெக நடத்திய விக்கிரவாண்டி மாநாடு அரசியல் ரீதியாக பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை ஆட்சி செய்து வரும் மற்றும் ஆட்சி செய்த கட்சிகளின் ஊழல் பட்டியல்களைத் தயார் செய்ய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக, அதிமுகவை குறிவைத்து வழக்கறிஞரின் உதவியோடு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், ஆதாரப்பூர்வமாக கட்சியினரை எதிர்க்க வேண்டும் என்பதற்காக தீவிரமாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். மேலும், ஊழல் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பொதுமக்கள் மத்தியில் பிரசாரத்தில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்தால் தமிழக அரசியலில் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் அரசியல் மாநாடு நடத்தியது. அந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், பாஜக சித்தாந்த எதிரி என்றும் திமுக அரசியல் எதிரி என்றும் குறிப்பிட்டார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற குண்டையும் வீசியிருந்தார்.
திமுக, பாஜக கட்சிகள் விஜய்க்கு எதிரான கருத்துகளை முன் வைத்து வருகின்றன. விசிக தலைவர் தொல். திருமாவளவனும் விஜய்க்கு எதிராக கூறியிருந்தார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறார். திமுகவும் விஜய் அரசியலை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
டிசம்பர் மாதம் நடைபெற உள்ள அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் திருமாவளவன் மற்றும் விஜய் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதேசமயம் கட்சியை வலுப்படுத்துவதற்காக டிசம்பர் மாதம் முதலே விஜய் மண்டல வாரியாக விசிட் அடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க உறுப்பினர் சேர்க்கை பணியை ஜெட் வேகத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் தொடங்கியுள்ளனராம். தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்கள் சேர்க்கைக்கு என தனி செயலியை நடிகர் விஜய் ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருந்தார். உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டதில் இருந்தே லட்சக்கணக்கான விஜய் ரசிகர்கள் அதில் இணைந்து வருவதாகவும், இதனால் தவெக சர்வரே அடிக்கடி முடங்குவதாகவும் அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மாவட்ட வாரியான சுற்றுப் பயணத்திற்கு முன்னர் ஆட்சி செய்த மற்றும் ஆட்சி செய்து வரும் கட்சிகளின் ஊழல் பட்டியலைத் தயார் செய்ய தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக மாநாட்டில் ஊழல்களைப் பற்றியும், ஆட்சி செய்து வரும் வந்த கட்சிகளைப் பற்றியும் பல்வேறு விமர்சனங்களையும், கருத்துகளையும் விஜய் முன்வைத்திருந்தார். அதன் தொடர்ச்சியாக அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் எந்தக் கட்சியையும் கடுமையாக விமர்சிக்க வேண்டாம். கருத்தியல் ரீதியாக மட்டும் விமர்சிக்கும்படியும், பதிலளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
திமுக, அதிமுக கட்சியின் ஊழல்களைப் பற்றி பொதுமக்களிடம் பிரசாரத்தில் ஈடுபடும் முன்பு அதற்கான ஆதாரங்கள் நம்மிடம் இருக்க வேண்டும். அதன் பிறகே குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம் என்று நிர்வாகிகளிடம் விஜய் ஆலோசனை தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், முடிந்தால் ஊழல் பட்டியலுடன் ஆளுநரைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தனியார் புலனாய்வு நிறுவனத்தின் உதவியோடு திமுக, அதிமுக பிரமுகர்களின் ஊழல் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுகவின் ஊழல் பட்டியலை தயார் செய்து ஆளுநரை சந்தித்திருந்த நிலையில், அந்த சந்திப்பைத் தொடர்ந்து விஜயும் மாவட்ட பொறுப்பாளர்கள், வழக்கறிஞர்கள் உதவியுடன் தற்போது தீவிரமாக ஊழல் பட்டியலைத் தயார் செய்து வருகின்றார்.
இந்த ஊழல் பட்டியலைத் தயார் செய்த பின்னர் ஒவ்வொரு மாவட்டமாக பொறுப்பாளர்களைச் சந்தித்து கொள்கை விளக்க கூட்டம், பொதுக் கூட்டங்களில் இரண்டு கட்சிகளின் ஊழல் குறித்து ஆதாரத்துடன் பொதுமக்களை சந்திக்க தவெகவினர் முடிவெடுத்துள்ளதாகவும், 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் இந்த ஊழல் பட்டியல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற வகையில் இப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications