Vijay: விஜய்க்கு பின்னால் மிகப்பெரிய கூட்டம்.. மிரளும் கட்சிகள்.. ஆனால் நெருடலாக்கும் 3 விஷயங்கள்
சென்னை: தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் அரசியலில் வியூகம் மிகச் சரியாக அமைத்தால், 2026 தேரதலில் அவர் பிரதான எதிர்க்கட்சியாக வருவதற்கான வாய்ப்புகள் கூட இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், அது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை என்றும், மிகச் சரியான அரசியல் வியூங்களை வகுக்க அவர் மூன்று விஷயங்களை செய்ய வேண்டியது அவசியம் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் இனி ஒவ்வொரு வார இறுதியிலும் பிரச்சாரம் செய்ய தொடங்கி உள்ளார். இன்று திருச்சியில் ஆரம்பித்துள்ளார். இனி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் ஒரு ஊரில் விஜய்யை பார்க்க முடியும். அவர் தனது எதிரிகளாக கருதும் திமுகவும், பாஜகவும் அவரையும் அவரது கட்சியினரையும் கடுமையாக விமர்சிக்கிறார்கள். வெறும் ரசிகர் கூட்டம் என்றும், கொள்கை கோட்பாடு, தெளிவான திட்டங்கள், கட்டுப்பாடான தொண்டர்கள் என எதுவும் இல்லை என்றும் விமர்சிக்கிறார்கள்.

இளம் தலைமுறை ஆதரவு
ஆனால் விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மற்றும் இன்றைய இளம் தலைமுறையினர் விஜய்க்கு ஆதரவாக உள்ளனர். இதனால் தற்போதைய அரசியல் சூழல் விஜய்க்குச் சாதகமாகவே உள்ளது. அரசியல் வெற்றிடத்தை நிரப்ப ஒரு புதிய சக்தி தேவை என்ற மக்களின் விருப்பம், அந்த கட்சிக்கு ஒரு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, திறமையான அரசியல் வியூகங்களுடன் பயணித்தால் மட்டுமே, அவர் எதிர்காலத்தில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
ஜெயலலிதா இல்லாதது
இதுபற்றி அரசியல் நிபுணர்கள் கூறும் தகவல்களை பார்ப்போம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவின் உட்கட்சிப் பூசல்கள், தலைமைப் பிரச்சனை, மத்தியில் உள்ள பாஜ உடன் கூட்டணி எனப் பல்வேறு காரணங்களால் அந்த கட்சி பலவீனமடைந்தள்ளதாகவும், எனவே ஒரு வலுவான எதிர்க்கட்சியாகச் செயல்படுவதில் பல சவால்களை அதிமுக சந்தித்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
தடுமாறும் அதிமுக
அதேபோல் அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியினர், தற்போது தடுமாறுவதாக கூறும் சில அரசியல் நிபுணர்கள், இந்த வாக்குகள், ஒரு புதிய மற்றும் வலுவான தலைமையை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக கூறுகிறார்கள். விஜய்க்கு தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு அபரிமிதமானது. இதுவே அவரது கட்சிக்கு ஒரு முக்கிய பலமாக அரசியல் நிபுணர்களால் பார்க்கப்படுகிறது.
விஜய் அரசியல் வியூகம் எப்படி
அதேபோல் இரண்டு திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு மாற்றாக ஒரு புதிய தலைமை உருவாக வேண்டும் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருப்பவர்களும் அதிகம். அந்த எதிர்பார்ப்பை விஜய் எப்படி பூர்த்தி செய்வார்.. அவரது அரசியல் வியூகம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து இருக்குமாம்.
வாக்கு வங்கியாக மாற வேண்டும்
அரசியல் வியூகத்தை பொறுத்தவரை ரசிகர்களை வாக்கு வங்கியாக மாற்ற வேண்டும். ஆனால் இதுவே அவர் செய்ய வேண்டிய முதல் மற்றும் மிகப்பெரிய சவாலான வேலையாகும். ரசிகர்கள் அனைவரும் வாக்காளர்களாக மாறுவது கிடையாது. எனவே விஜய் தனது ரசிகர்களை அரசியல் களப்பணியாளர்களாகவும், உறுதியான வாக்காளர்களாகவும் மாற்றுவது அவசியம் ஆகும்.
வலுவான கட்சி அமைப்பு
அதேபோல் கிராமங்கள் வரை ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றாலும், நடிகர் விஜய் வலுவான கட்சி அமைப்பை, திமுக, அதிமுக போல் ஒவ்வொரு கிராமத்திலும் உருவாக்க வேண்டும். ஏனெனில் ரசிகர் மன்றம் என்பது வேறு, ஒரு அரசியல் கட்சி என்பது நிச்சயம் வேறு. அடிமட்ட அளவில் கிராமங்கள், நகரங்களில் வலுவான ஒரு கட்சி அமைப்பை உருவாக்க வேண்டியது விஜய்க்கு உள்ள முக்கியமான வேலை. ஆனால் இது ஒரு நீண்ட காலமாகும்.
கவர்ச்சி அரசியல் போதாது
அதேபோல் தெளிவான கொள்கைகள் மற்றும் திட்டங்களை நடிகர் விஜய் அறிவிக்க வேண்டியது அவசியம். வெறும் கவர்ச்சி அரசியலை மட்டும் நம்பி இருக்க கூடாது. இல்லாவிட்டால் பெரிய நடிகர்கள் எப்படி வரிசையாக அரசியலுக்கு வந்து வீழ்ந்தார்களோ அந்த கதையாகிவிடும். தமிழகத்தின் முக்கியப் பிரச்சனைகளான கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம், ஊழல் போன்றவற்றுக்கு தீர்வு காணும் வகையில் ஒரு தெளிவான கொள்கைத் திட்டத்தை வகுத்து மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம்.
அறிவார்ந்த நபர்கள்
விஜய் மட்டுமல்ல, அவரை சுற்றிலும் அறிவார்ந்த நபர்கள் இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரச்சனைகள் மற்றும் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் பற்றி தெளிவாக தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பிரச்சனைக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகளின் திட்டங்களை விட எங்கள் திட்டங்கள் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை உருவாக்கும் என்பதை மக்களுக்கு விஜய் மற்றும் அவரது கட்சியினர் எடுத்து செல்ல வேண்டும். அது மட்டுமல்ல, ஊடகங்களில் அறிவார்ந்த விவாதங்களில் முறியடிக்கும் அளவிற்கு புள்ளி விவரத்துடன், தெளிவாக வல்லமையுடன் முறியடிக்க வேண்டும்.
நம்பகத்தன்மை
மேலும் நம்பகத்தன்மையை விஜய் உறுதி செய்ய வேண்டும். அதாவது விஜய் தனது அரசியல் பிரவேசம் ஒரு நீண்ட காலத் திட்டமா அல்லது தேர்தலுக்கான உத்தியா என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டும். தொடர் செயல்பாடுகள் மூலம் விஜய் நிரூபிக்க வேண்டும். விஜய் தன்னை ஒரு நேர்மையான தலைவராக முன்னிறுத்த விரும்புவதால், அவரது கட்சியில் ஊழலுக்கு இடம் கொடுக்காமல் இருப்பதும், அவரை மீறி செயல் படாமல் கட்டுக்கோப்பாக கட்சியை வழிநடத்துபவராகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் வரும் தேர்தலில் முக்கியமான எதிர்க்கட்சி என்கிற நிலையை எட்ட முடியும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications