“வாழ்க்கை ஒரு வட்டம்”.. யாரை கடுமையாக எதிர்த்தாரோ அந்த ஸ்டாலின் சொன்னால்தான் விஜய் முதல்வர்!
சென்னை: யாரை எதிர்த்து முழுக்க முழுக்க பிரச்சாரம் செய்து வந்தாரோ இன்று அதே திமுக தலைவர் தலை அசைத்தால்தான் தன்னால் ஆட்சி அமைக்க முடியும் என்ற இடத்திற்கு வந்துள்ளார் விஜய். "வாழ்க்கை ஒரு வட்டம்.. இங்க தோக்குறவன் ஜெயிப்பான், ஜெயிக்குறவன் தோற்பான்" என விஜய் சினிமாவில் பேசிய வசனம் இப்போது அவருக்கே பொருந்தியுள்ளது.
நடைபெற்ற முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் 108 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் இல்லாத நிலையில் கடந்த சில நாட்களாக திமுக கூட்டணி கட்சிகளுடன் தவெக பேசி ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது.

ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய்
ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையிலும் புதன்கிழமை தமிழக பொறுப்பு ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க விஜய் உரிமை கோரினார். ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என்று ஆளுநர் தெரிவித்த நிலையில் மீண்டும் வியாழக்கிழமை இரண்டாவது முறையாக ஆளுநரை சந்தித்து பேசி இருந்தார் விஜய்.
தவெகவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க கைகோர்த்துள்ள நிலையில், சிபிஐஎம், சிபிஐ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் தமிழக வெற்றிக் கழகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மூன்று கட்சிகளும் தற்போது வரை உறுதியான நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை.
திமுக - அதிமுக கூட்டணி?
தவெக ஆட்சி அமைக்க போராடி வரும் நிலையில், புதன்கிழமை இரவில் இருந்து ஒரு தகவல் இறக்கை கட்டிப் பறக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக எதிரெதிர் துருவங்களாக அரசியல் களத்தில் செயல்பட்டு வரும் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
சட்டமன்றத் தேர்தல் தோல்வியை தொடர்ந்து, திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசியல், நிர்வாக நிலைமைகளை ஆராய்ந்து அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கி திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது திமுக மற்றும் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை உறுதி செய்யும் சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது.
பீதி கிளப்பிய திமுக அதிமுக
சட்டமன்றத் தேர்தலில் 47 இடங்களில் வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்துள்ள அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிலையில், வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேரடியாக அங்கு சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அங்கேயே அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தையும் நடத்தி இருக்கிறார். அதில் கட்சியின் நலன் கருதி நான் ஒரு முடிவை எடுத்துள்ளேன். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், பொறுமையாக இருங்கள், நல்லதே நடக்கும் என பேசி உள்ளார்.
மூன்று கட்சிகள்
திமுக அதிமுக கூட்டணி என அரசியல் களம் பரபரத்துக் கிடக்கும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் மேலும் பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளன. அதிமுக உடன் கூட்டணி என்பதை திமுக திட்டவட்டமாக மறுத்துள்ளது.
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் கூட்டமும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாக மற்றும் செயற்குழு கூட்டமும் வெள்ளிக்கிழமை நடைபெறும் நிலையில் கூட்டத்திற்கு பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரிப்பது தொடர்பாக மூன்று கட்சிகளும் அறிவிக்க உள்ளன.
யாரை விமர்சித்தாரோ
விஜய் யாரை தீய சக்தி என விமர்சித்தாரோ, எந்த திமுகவை எதிர்த்து ஒவ்வொரு பிரச்சாரக் கூட்டத்திலும் கடுமையாகப் பேசினாரோ அந்தக் கட்சியுடன் பல வருடங்களாக கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸ், விசிக கம்யூனிஸ்ட், இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கேட்டு கடிதம் எழுதி இருக்கிறார் விஜய். அதில் காங்கிரஸ் ஆதரவு அளித்துவிட்டது.
ஐயூஎம்எல் கட்சி, திமுக தலைவர் சொல்வதை தான் நாங்கள் கடைபிடிப்போம் என கூறிவிட்டது. விசிக மற்றும் இடதுசாரிகள் தங்களின் முடிவை வெள்ளிக்கிழமை தெரிவிப்பதாக கூறியிருக்கிறார்கள். அதோடு அவர்கள் ஸ்டாலினுடன் வியாழனன்று காலை ஆலோசனையும் நடத்தினர். அப்போது உங்களுக்கு விருப்பம் இருந்தால் செல்லுங்கள் என ஸ்டாலின் கூறியதாக ஒரு தகவல் உலவுகிறது.
விஜய் வசனம் அவருக்கே பொருந்துது
முன்னதாக ஸ்டாலின், தமிழகத்தில் தவெக ஆட்சி அமைப்பதற்கு திமுக இடையூறு செய்யாது, அரசியலமைப்பு நெருக்கடியையோ அல்லது மற்றொரு தேர்தலையோ திமுக விரும்பவில்லை என ஸ்டாலின் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் முதல்வர் கனவு தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் கைகளில் உள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் கண்ணசைத்தால் தான், கூட்டணியில் இருக்கும் விசிக, இடதுசாரிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்ற நிலை உள்ளது. "வாழ்க்கை ஒரு வட்டம்.. இங்க தோக்குறவன் ஜெயிப்பான், ஜெயிக்குறவன் தோற்பான்" என விஜய் சினிமாவில் பேசிய வசனம் இப்போது அவருக்கே பொருந்தியுள்ளது.













Click it and Unblock the Notifications