இன்ஸ்டாகிராம் பாலோயர்கள் எண்ணிக்கை.. தவெகவை வைத்து உயர்த்திக் கொள்ளும் சோசியல் மீடியா பிரபலங்கள்!
சென்னை: தவெக மற்றும் விஜய் ஆகியோரை வைத்து இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர்கள் பலரும் தங்களை பின் தொடர்வோரின் எண்ணிக்கையை அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. விஜய்க்கு ஆதரவாகவும், தவெகவுக்கு ஆதரவாகவும் அரசியல் பேசி வீடியோ வெளியிட்டு பல இன்ப்ளூயன்சர்கள் பணம் ஈட்டி வருவதாக பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி சுமார் 2 ஆண்டுகளாகிவிட்டது. 2026 சட்டசபைத் தேர்தலை இலக்காக வைத்து விஜய் பணியாற்றி வருகிறார். விக்கிரவாண்டி மாநாடு, மதுரை மாநாடு ஆகியவற்றுக்கு பின் ஒவ்வொரு வாரமும் விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் கரூர் சம்பவத்திற்கு பின் விஜய்யின் பிரச்சார பயணம் நின்று போயிருக்கிறது.

இதன்பின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் உள் அரங்கு சந்திப்பை விஜய் நடத்தி இருக்கிறார். இதையடுத்து டிசம்பர் 9ஆம் தேதி புதுச்சேரியிலும், டிசம்பர் 16ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திலும் பொதுக்கூட்டம் நடத்த தவெக திட்டமிட்டுள்ளது. இதனால் 2026 சட்டசபைத் தேர்தலுக்கான பணிகளை தொடங்க விஜய் ஆயத்தமாகி வருவதாக பார்க்கப்படுகிறது.
ஆனாலும் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் அமைதியாக இருந்து வருகிறார். பாஜகவை கொள்கை எதிரி என்று விஜய் கூறி வரும் சூழலில், திருப்பரங்குன்றம் தீபத்தூண் பிரச்சனையில் தவெகவின் நிலைப்பாடு என்ன என்பது கேள்வியாக உள்ளது. இதனிடையே தவெகவை இன்ப்ளூயன்சர்கள் தங்களின் சொந்த லாபத்திற்காக பயன்படுத்தி வருவது பேசுபொருளாகி இருக்கிறது.
விஜய்யின் தீவிர ரசிகர்கள் பலரும் தவெக தொண்டர்களாக மாறி இருப்பதால், அவர்களின் அரசியலில் இன்னும் முதிர்ச்சி அடையாமல் இருந்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி இன்ஸ்டாகிராமில் இன்ப்ளூயன்சர்கள் பலரும் விஜய் மற்றும் தவெகவுக்கு ஆதரவாக சில வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதனால் அவர்களை தவெக தொண்டர்கள் பின்பற்றி வருகின்றனர்.
இதன் மூலமாக இன்ப்ளூயன்சர்கள் பலரும் தங்களை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி இருக்கின்றனர். ஃபாலோயர்கள் அதிகரித்த பின், வழக்கம் போல் தங்களின் விளம்பர வீடியோக்கள் மற்றும் சொந்த திறமைகளை வெளியிட்டு பணம் சம்பாதிக்க தொடங்கி இருக்கிறார்கள். இது தவெக தொண்டர்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.












Click it and Unblock the Notifications