விஜய்யின் நேரடி வார் ரூம் ரெடி.. பணியில் 80 ஊழியர்களை நியமித்த தவெக.. பீதியில் மாவட்ட நிர்வாகிகள்!
சென்னை: சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், தவெக தலைவர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் ஒரு வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. 80 பேர் கொண்டு அமைக்கப்பட்டுள்ள வார் ரூம் விஜய்யின் கண்காணிப்பில் இயங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வார் ரூம் மூலமாக மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் மேற்கொள்ளும் கட்சிப் பணிகளை விஜய் கண்காணிப்பார் என்று தெரிய வந்துள்ளது.
2026 சட்டசபைத் தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகம் செயல்பட்டு வருகிறது. கரூர் சம்பவத்திற்கு பின் சுமார் ஒரு மாதமாக அமைதி காத்த தவெக, தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கரூரில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் அழைத்து விஜய் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதன்பின் ஒவ்வொரு நாளும் தவெகவின் செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் நாகையில் மீனவர்கள் பிரச்சனைக்காக உண்ணாவிரதம், மறுபக்கம் தவெகவுக்கான சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் வாங்கும் நடவடிக்கை என்று தவெக தங்களின் அரசியலை வேகப்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஜனநாயகன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் விஜய் காணப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்பின் விஜய் மீண்டும் மக்கள் சந்திப்பு பயணங்களையும் மேற்கொள்ள உள்ளார். இருந்தாலும் கட்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய மாவட்டச் செயலாளர்களை கண்காணிக்க விஜய் புதிய திட்டத்தை உருவாக்கி இருக்கிறார். ஏற்கனவே மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை கொடுக்க தனியார் நிறுவனம் ஒன்றுடன் தவெக ஒப்பந்தம் செய்திருக்கிறது.
தற்போது விஜய்க்காக பிரத்யேக வார் ரூம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வார் ரூம் மூலமாக மாவட்ட நிர்வாகிகளை விஜய் நேரடியாக கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சோசியல் மீடியாவில் திமுகவுக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுக்க தவெக ஆயத்தமாகி இருக்கிறது.
இத்தனை நாட்களாக ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனம் மூலமாகவே தவெகவின் வார் ரூம் பணிகள் செய்யப்பட்டது. தற்போது தனியாக அலுவலகம் அமைக்கப்பட்டு, இதற்காகவே 80 ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். தேவையான நேரத்தில் விஜய் இந்த வார் ரூம் மூலமாக மாவட்டச் செயலாளர்களுடன் பேசுவார் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications