18 முதல் 40 வயது வரை பெருகும் ஆதரவு.. தவெகவுக்கு 28 சதவிகித வாக்கு வங்கி.. ஆதவ் அர்ஜுனா சொன்ன டேட்டா
சென்னை: தவெகவின் வாக்கு சதவிகிதம் 28 சதவிகிதம் என்று கணிக்கப்படுவதாகவும், இன்னும் 10 சதவிகிதத்தை நோக்கி உழைத்தால் பெரும் வெற்றி நிச்சயம் என்று அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். தற்போது தவெகவுக்கு 18 முதல் 40 வயது வரையிலான மக்கள் ஆதரவு அளிப்பதாக கூறிய ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் சில ஆலோசனைகளை வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தவெகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு மேல் அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் விஜய்யுடன் இருந்து முடிவுகளை எடுப்பது தவெகவுக்கு பலன் கொடுக்கும் என்று கருதப்படுகிறது. அதற்கேற்ப தவெகவின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் மேற்கு மண்டலத்தில் உள்ள 4 மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலாளர் பொறுப்பும் செங்கோட்டையனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. தவெகவில் இணைந்த பின் அக்கட்சியின் தலைமை நிலைய நிர்வாகிகளுடன் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அதற்கு முன் ஆதவ் அர்ஜுனா பேசிய சில கருத்துக்கள் தவெகவினர் மத்தியில் பரவலாக கவனம் பெற்று வருகிறது.
அதில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், 1977ஆம் ஆண்டு எம்ஜிஆருடன் இருந்து சட்டசபை உறுப்பினராக பெரிய வரலாறு தொடங்கியதில் பங்கேற்றியவர். அதேபோல் ஜெயலலிதா முதல்வரான போதும் சென்கோட்டையன் உடனிருந்தார். தற்போது 3வது முறையாக புதிய வரலாற்றை உருவாக தவெகவில் இணைந்துள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பின் விஜய் முதல்வராக்க முடிவு எடுத்திருக்கிறார்.
தேசிய கட்சிகள் தொடங்கி மாநிலக் கட்சிகள் வரை செங்கோட்டையனை இழுக்க முயற்சித்தன. தற்போது தவெகவின் வாக்கு வங்கி 28 சதவிகிதம் இருக்கும் என்று கணித்திருக்கிறோம். இன்னும் 10 சதவிகிதத்தை பெறுவதற்காக உழைத்தால், நிச்சயம் வெற்றி உறுதியாகும். தவெகவுக்கு தற்போது 18 வயது முதல் 40 வயது வரையிலான மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள்.
அந்த ஆதரவை 90 வயது வரை இருக்கும் மக்களிடம் பெற வேண்டும். இந்த அறிவுரையை செங்கோட்டையன் தவெகவில் இணைந்தவுடன் கூறி இருக்கிறார். அதனால் 2026 சட்டசபைத் தேர்தலில் புதிய வரலாற்றை தவெக உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதத்தின் ஆதவ் அர்ஜுனாவின் கணக்கு உயர்ந்து கொண்டே போவது தவெகவினர் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications