5 சின்னங்களை லாக் செய்த விஜய்.. டெல்லி சென்ற ஆதவ் அர்ஜுனா.. தவெகவின் அடுத்த வியூகம் என்ன?
சென்னை: தவெகவின் சின்னம் தொடர்பாக அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் நவம்பர் 12ஆம் தேதி முதல் பொது சின்னத்திற்காக விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தவெக அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கரூர் விவகாரத்திற்கு பின் தவெக சுமார் 30 நாட்களாக அமைதி காத்த நிலையில், கடந்த மாதம் 27ஆம் தேதி கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அழைத்து விஜய் ஆறுதல் தெரிவித்தார்.

இதன்பின் நவம்பர் 5ஆம் தேதி தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் கரூர் விவகாரத்தில் நாங்கள் முடங்கிவிட மாட்டோம் என்றும், மக்கள் துணையுடன் திமுகவை வீட்டிற்கு அனுப்புவோம் என்று விஜய் சூளுரைத்தார். மீண்டும் 2026ல் இரு கட்சிகளுக்கு இடையில் மட்டுமே போட்டி என்று கூறிய விஜய், அது திமுக vs தவெக என்றும் தெரிவித்தார்.
இதனால் தவெக தொண்டர்கள் மீண்டும் உற்சாகம் அடைந்துள்ளனர். அதேபோல் ஜனநாயகன் படத்தின் அப்டேட்களும் வருவதோடு, இன்று முதல் பாடல் ரிலீஸ் ஆகவுள்ளது. இதனால் விஜய் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தவெகவின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து விசாரிக்கையில், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் நவம்பர் 12ஆம் தேதி முதல் பொது சின்னத்தில் போட்டியிட விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தவெக சார்பாக ஏற்கனவே ஆட்டோ, பிகில் உள்ளிட்ட சின்னங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் இளைஞர்கள், பெண்கள் மத்தியில் எளிதாக சின்னம் சென்றடையும் வகையில் விஜய் 5 சின்னத்தை தேர்வு செய்துள்ளார்.
இதனால் அந்த சின்னங்களில் ஒன்றை பெற்றிடக் கோரி ஆதவ் அர்ஜுனா டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அடுத்த சில நாட்களில் தவெகவின் நிர்வாகக் குழுவில் இருந்தும் சிலர் டெல்லிக்கு செல்லலாம் என்று கருதப்படுகிறது. இதன் மூலமாக தவெக தேர்தல் பணிகளில் உஷாராக இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications