வேட்பாளர்கள் பட்டியல் ரெடி.. மாநில நிர்வாகிகள் போட்டியிடும் தொகுதிகள்.. விஜய் கையில் மாஸ்டர் பிளான்!
சென்னை: தவெகவில் மாநில பொறுப்புகளில் இருப்பவர்களை கொண்டு முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை விஜய் தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இன்னும் 2 மாதங்களில் முதற்கட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்தவும் விஜய் தரப்பு திட்டமிட்டு வருகிறது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், தவெக தரப்பில் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே திமுகவை தவிர்த்து மற்ற கட்சிகளில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வரும் சூழலில், தேர்தல் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்தில் டிசம்பர் 18ஆம் தேதி பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை செங்கோட்டையன் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 4 தீர்மானங்கள் போடப்பட்டது.
அதில் முக்கியமாக விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்றும், கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில் விஜய் வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்வது தொடர்பான பணிகளில் தீவிரமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு பின் தவெகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட விஜய் ஆயத்தமாகி வருகிறார். முதற்கட்டமாக மாநில அளவிலான பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள் போட்டியிடும் தொகுதிகளை அறிவிக்க விஜய் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்தும் முடிவில் விஜய் இருக்கிறார்.
இதற்காக தவெகவின் தலைமை கழக நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் உள்ளார். அதேபோல் இனி பிரச்சார பயணங்களின் போது அந்தந்த மாவட்டச் செயலாளர்களையும் அருகில் வைத்துக் கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தன் மீதான வெளிச்சம் வேட்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கும் செல்லும் என்று கருதப்படுகிறது.
அதேபோல் அதிமுக கூட்டணி இறுதி வடிவம் பெறுவதற்கு முன், தேர்தல் கூட்டணிக்காக அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழு தங்களின் பணிகளை முடிக்கவும் விஜய் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் தவெக தரப்பில் சில கட்சிகளின் நிர்வாகிகளை சந்திக்க வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications