பாஜகவுக்கு அடிமையாக இருக்காரு.. மெட்ரோ பற்றி விஜய் வாய் திறக்காதது ஏன்? டிகேஎஸ் இளங்கோவன் கேள்வி!
சென்னை: தவெகவின் தலைவர் விஜய் பாஜகவின் அடிமையாக உள்ளார் என்று திமுக நிர்வாகி டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். தன் மீது தவறு இருப்பதால் கரூர் விவகாரம் தொடர்பாக விஜய் பேச மாட்டார் என்று கூறிய டிகேஎஸ் இளங்கோவன், மெட்ரோவிற்கு அனுமதி கொடுக்காத பாஜகவை எதிர்த்து விஜய் பேசாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
காஞ்சிபுரத்தில் உள்ள ஜேப்பியர் கல்லூரியில் மக்களை தவெக தலைவர் விஜய் சந்தித்தார். கரூர் சம்பவம் நடந்து 55 நாட்களுக்கு பின் விஜய்யின் முதல் மக்கள் சந்திப்பு பயணம் என்பதால், விஜய்யின் பேச்சு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்த கூட்டத்தில் விஜய் பேசுகையில், அண்ணா தொடங்கிய கட்சியை இன்று என்னவெல்லாம் செய்கிறார்கள்.

திமுக நம் மீது வன்மத்தோடு இருக்கலாம். அவர்கள் பொய் சொல்லி நம்மை நம்ப வைத்து வாக்கு பெற்றார்கள். இப்போது ஆட்சிக்கு வந்து நல்லது செய்வதை போல் நாடகம் ஆடுகிறார்கள். குறி வைத்தால் தவற மாட்டேன்.. தவறினால் குறியே வைக்க மாட்டேன் என்று எம்ஜிஆர் வசனம் பேசி இருப்பார். இந்த வசனம் ஏன் பேசுகிறேன் என்று வேண்டியவர்களுக்கு புரியும்.
தவெகவுக்கு ஆதரவு தரும் இளம் தலைமுறையினரை தற்குறிகள் என்கிறார்கள். இந்த தற்குறிகள் தான் உங்கள் அரசியலை கேள்விக்குறியாக்கப் போகிறார்கள். இவர்கள் தற்குறிகள் அல்ல.. தமிழ்நாட்டு அரசியல் மாற்றத்திற்கான ஆச்சரியக்குறிகள் என்று தெரிவித்தார். இதற்கு திமுக நிர்வாகி டிகேஎஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.
அதில் டிகேஎஸ் இளங்கோவன் பேசுகையில், விஜய்க்கு அண்ணாவை பற்றி ஒன்றும் தெரியாது. அவர் முதல்வராக வேண்டும் என்ற நோக்கில் கட்சி தொடங்கவில்லை. மக்களுக்காக போராடுவேன் என்று கூறி கட்சி தொடங்கி சிறை சென்றவர் அண்ணா. முதல் தேர்தலில் முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்துடன் விஜய் வந்துள்ளார். திமுகவினர் கொள்கைக்காக சிறைக்கு சென்றவர்கள்.
அண்ணாவின் கொள்கைகளை தான் திமுக தற்போது வரை நிறைவேற்றி வருகிறது. கட்சி பதவிக்காக கொள்கை அடிப்பதாக தவெகவினரே குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள். அதேபோல் மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி கொடுக்காத பாஜகவை எதிர்த்து விஜய் பேசாதது ஏன்? தமிழ்நாடு பிரச்சனை பற்றி விஜய் என்ன பேசி இருக்கிறார். விஜய் பாஜகவின் அடிமையாக இருக்கிறார்.
தன் மீது தவறு இருப்பதால் கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் குறித்தும் ஒருபோதும் பேச மாட்டார். கரூர் கூட்டத்திற்கு விஜய் தாமதமாக வந்ததுதான் உயிரிழப்புக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார். கொள்கை எதிரியான பாஜகவை பற்றி விஜய் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications