திமுக மீது வன்மம்.. விஜய்யிடம் அடிப்படை கொள்கை தெளிவே இல்லை.. விசிக எம்எல்ஏ சிந்தனை செல்வன் அட்டாக்!
சென்னை: திமுக மீது வன்மத்தை கக்கும் பணியில் மட்டுமே தவெக தலைவர் விஜய் ஈடுபடுவதாக விசிக எம்எல்ஏ சிந்தனை செல்வன் விமர்சித்துள்ளார். அரசியல் கட்சியின் கடைநிலை பேச்சாளரின் பேச்சை போன்று விஜய் பேசுவதாக கூறிய அவர், விஜய்யிடம் எந்த கொள்கைத் தெளிவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் தவெக தரப்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் விஜய் பல்வேறு விஷயங்களை பேசினார். குறிப்பாக தவெகவின் கொள்கை குறித்து விஜய் பேசுகையில், அண்ணாமலை மறந்துவிட்ட திமுக தலைவர், நம்மை பார்த்து கொள்கையில்லை என்று சொல்கிறார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிஏஏ எதிர்ப்பு, வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது, சமத்துவம், சமூக நீதி என்று கூறிய நமக்கு கொள்கையில்லையா? திமுகவின் கொள்கையே கொள்ளை தானே என்று ஆவேசமான விமர்சித்தார். இதுதொடர்பாக விசிக எம்எல்ஏ சிந்தனை செல்வன் பேசுகையில், நண்பர் விஜய் மக்கள் சந்திப்பை முறைமைப்படுத்தியது வரவேற்கத்தக்கது.
ஆனால் மீண்டும் திமுக எதிர்ப்பை மட்டுமே முன்னிலைப்படுத்தி வருகிறார். அதிகாரத்தில் உள்ள கட்சியை விமர்சிப்பது அனைவருக்குமான உரிமை. அந்த உரிமை விஜய்க்கும் உண்டு. ஆனால் விஜய்யிடம் கொள்கை குறித்த கோளாறு இருக்கிறது. ஏனென்றால் இந்தியாவின் அடிப்படை போராட்டம் என்பது ஜனநாகய உரிமைகளுக்கும், மதவாதத்திற்கும் இடையிலான சண்டை தான் தற்கால அரசியல் சூழல்.
இந்த இரண்டில் எதனை ஆதரிக்கிறோம் என்பதே முக்கியம். இதில் எதை ஆதரிக்கிறோம் என்பது குறித்த அடிப்படை தெளிவும் இல்லாமல் விஜய் இருக்கிறார். திமுக மீது வன்மத்தை கக்கும் பணியில் மட்டுமே ஈடுபடுகிறார். இது பாஜகவின் இன்னொரு அஜெண்டாவாக மட்டுமே இருக்க முடியும். திமுக எதிர்ப்பு மட்டுமே கொள்கை என்பதால், விஜய் தன்னைத் தானே அம்பலப்படுத்தி கொண்டு வருகிறார்.
திமுக எதிர்ப்பு என்பது பாஜக ஆதரவை நோக்கி நகர்த்தும் விஷயமாகவே அமையும். கடைநிலை கட்சியினர் பேச்சை போலவே விஜய்யின் பேச்சு உள்ளது. அதில் இன்னும் முதிர்ச்சியும், ஆழமும் இருக்க வேண்டும். நமக்கு எதிர்நிலையில் இருப்பவர்களிடம் எல்லாமே எதிர் கருத்தாக இருக்க வேண்டும் என்பது தேவையில்லை.. பிரதமர் மோடி குறித்து பாசிட்டிவான விஷயங்களை சொல்ல முடியும்.
விஜய்க்கும், தவெகவுக்கும் எந்தவிதமான கொள்கை குறித்த சித்தாந்தமும் இல்லை. இன்று அண்ணாவின் குரலாக அல்லாமல், சங்கரமடத்தின் குரலாகவே இருக்கிறது. யாரோ எழுதி கொடுக்கிற ஸ்கிரிப்ட்டா என்று தெரியாது. ஆனால் கடைசி பேச்சாளரின் அரசியல் சாரமற்ற உரையாகவே விஜய்யின் பேச்சு அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications