தவெக கூட்டணி பக்கம் செல்லாத கம்யூனிஸ்ட்கள்.. எந்த இடத்தில் பிரச்சனை தொடங்கியது? பின்னணி
சென்னை: தவெக தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ள சூழலில், அந்த கூட்டணியில் இணைய கம்யூனிஸ்ட்டுகள் ஆர்வம் காட்டவில்லை. அதுமட்டுமல்லாமல் தவெகவுக்கான ஆதரவு 5 ஆண்டுகள் தொடருமா என்பது அவர்களின் செயல்பாட்டை பொறுத்து அமையும் என்று பெ.சண்முகம் கூறியுள்ளார். இதனால் தவெக மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் இடையிலான கருத்து வேறுபாடு தொடங்கியது எங்கு என்பதை பார்க்கலாம்.
தவெக தலைமையிலான கூட்டணியில் இணைய காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்எல், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே கூட்டணியில் இணையவோ, ஆதரவு கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்கவோ முன் வரவில்லை. இருப்பினும் தவெக ஆட்சிக்கான ஆதரவு தொடரும் என்று அறிவித்துள்ளனர்.

ஆட்சிக்கு ஆதரவளிக்கும் சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகள், கூட்டணி இணைய தயக்கம் காட்டுவது ஏன் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தேசிய அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசியல் பாஜக எதிர்ப்பை மையமாக வைத்தே இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் தவெக இதுவரை பாஜக எதிர்ப்பில் அவ்வளவு தீவிரமோ, ஆர்வமோ காட்டவில்லை.
இது தொடக்கம் முதலே கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு உறுத்தலாவே இருந்து வருகிறது. அதேபோல் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து இடதுசாரிகள் மாணவர்களுக்கு எதிரான சுற்றறிக்கை மற்றும் குஜிலியம்பாறை வட்டாட்சியர் கம்யூனிஸ்ட்களை கணக்கெடுக்க கூறி சுற்றறிக்கை வெளியிட்டது ஆகியவை கம்யூனிஸ்ட் கட்சிகளை அதிருப்தி அடைய வைத்திருக்கிறது.
இன்னொரு பக்கம் தவெக ஆட்சிக்கு எதிராக கம்யூனிஸ்ட்கள் போராடி வருகின்றனர். விவசாயக் கடன் தள்ளுபடி, மாற்றுத்திறனாளிகள் போராட்டம் உள்ளிட்டவற்றில் கம்யூனிஸ்ட்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள். அதேபோல் மேகமலையில் பூர்வக்குடி மக்கள் வெளியேற்ற விவகாரத்திலும் தவெக அரசு இன்னும் உறுதியாக எந்த செயல்பாடுகளையும் செய்யவில்லை.
திமுக ஆட்சியின் போது கம்யூனிஸ்ட்டுகள் போராடும் போது, குறைந்தபட்சம் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும். ஆனால் தற்போது கம்யூனிஸ்ட்டுகளின் குரலை தவெக கண்டுகொள்வதில்லை. கூட்டணியில் ஆர்வம் காட்டும் தவெக, மக்கள் பிரச்சனைகள் மற்றும் பாஜகவுக்கு எதிரான அரசியலில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற பார்வை கம்யூனிஸ்ட்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதேபோல் மாவட்ட அளவில் கம்யூனிஸ்ட்கள் இன்னும் தவெகவுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே தொடர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
