மின்வாரியத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு! format செய்து பெங்களூரில் 2500 ரூபாய்க்கு விற்றது அம்பலம்!
சென்னை: தமிழக மின்சார வாரிய தலைமையகத்தில் இருந்து ஹார்டு டிஸ்க்குகள் திருட்டுச் சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 34 ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை ரூ 2500-க்கு விற்றது தெரியவந்தது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் நடந்த 397 கோடி ரூபாய் முறைகேடு குறித்து சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் டெண்டர் ஆவணங்கள் இடம் பெற்ற ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 20ஆம் தேதி இதை கண்டறிந்த பொறியாள் மலர்விழி, இந்த திருட்டு குறித்து தனது உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். மின் வாரிய அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மே 16, 17 ஆகிய நாட்களில் குறைந்த அளவில் ஊழியர்கள் பணியில் இருந்த போது ஹார்டு டிஸ்க் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டு இந்த தகவல்கள் கடந்த 2 தினங்களுக்கு முன்புதான் வெளியே தெரிந்தது. இந்த திருட்டு வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள வளர்புரத்தைச் சேர்ந்த 31 வயதான கோபிநாத், முரளி மனோகர் ஆகியோர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
தமிழக மின்சார வாரியத் தலைமையகத்தில் இருந்து ஹார்டு டிஸ்க்கள் திருடப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் கைதானவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியிருந்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியிருப்பதாவது: கோபிநாத் மே 16, 17 ஆகிய தேதிகளில் தமிழக மின்சார வாரியத் தலைமையகத்தில் இருந்து 34 ஹார்டு டிஸ்க்குகளை திருடியுள்ளார்.
பின்னர் அவற்றை தனது வீட்டில் மறைத்து வைத்திருந்து, அதில் இருந்த தரவுகளை எல்லாம் அழித்த பிறகு பெங்களூருக்கு அதை கொண்டு சென்றார். தலா ரூ 20000 மதிப்புள்ள ஹார்டு டிஸ்க்குகள் ஒவ்வொன்றும் ரூ 2500 க்கு விற்கப்பட்டன.
தற்போது மின்வாரியம் தொடர்பான கொள்முதல், ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களின் தொடர்பு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுவது குறித்து போலீஸார் பரிசீலனை செய்து வருகிறார்கள். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications