"கொட்டும் மழை.." கோவை உட்பட இந்த இடங்களில் இருக்கு.. சென்னையிலும் 2 நாள் மழை இருக்கு! வானிலை மையம்
சென்னை: சென்னையில் நேற்றிரவு திடீரென மழை கொட்டிய நிலையில், அடுத்து வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது.
சென்னையில் கடந்த ஜூலை மாதத்திற்குப் பிறகு வெப்பம் குறைந்து, அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இது கோடை வெயிலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

இருப்பினும், கடந்த ஒரு வாரமாகவே சென்னையில் வெப்பம் கணிசமாக அதிகரித்திருந்தது. இதற்கிடையே வரும் நாட்களில் அங்கே வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது.
மழை கொட்டும்: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (ஜூலை 23) மற்றும் நாளை (ஜூலை 24) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல வரும் ஜூலை 25 மற்றும் ஜூலை 26 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. மேலும், வரும் ஜூலை 27 முதல் ஜூலை 29 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சி (நீலகிரி) 140 மிமீ மழை கொட்டி தீர்த்துள்ளது.. அதைத் தொடர்ந்து கூடலூர் பஜார் (நீலகிரி) 8, மேல் கூடலூர் (நீலகிரி), சின்னகல்லாறு (கோயம்புத்தூர்) ஆகிய பகுதிகளில் தலா 70 மிமீ மழை பெய்துள்ளது. இப்படி நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. அதேபோல சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக்கடல் பகுதியில் இன்று 23.07.2023: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை ஜூலை 24ஆம் தேதி தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு -தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அதேபோல அரபிக்கடல் பகுதிகளில் 23.07.2023 முதல் 27.07.2023 வரை: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். லட்சத்தீவு பகுதிகள், கேரள-கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப் படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications