வருடத்திற்கு 2 படம்.. ரஜினியை வைத்து கோடி கோடியாக சம்பாதிப்பது யார்? சீறும் சீமான்
சென்னை: விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பே அவரை ஆதரித்துப் பேசி வந்த நிலையில், தற்போது ஏன் விஜய்யை எதிர்க்கிறேன் என்பதை சீமான் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
தமிழ் சினிமா இதுவரை எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, ஜானகி என பல முதல்வர்களைக் கொடுத்திருக்கிறது. ஆனால், இவர்கள் யாரும் வெறும் சினிமா புகழால் ஆட்சிக்கு வந்தவர்கள் இல்லை. அரசியலுக்காக சினிமாவை பயன்படுத்தியவர்கள். அதே வரிசையில் ரஜினிதான் 25 ஆண்டுகளாக அரசியலுக்கு வரப்போகிறேன் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனால், கடைசியாக தன்னால் முடியாது என ஒதுங்கிக் கொண்டார். அவருக்கு முன்பாக கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்தார். அதுவரை தமிழ் நாட்டில் சிஸ்டம் கெட்டுவிட்டது என்று பேசிய ரஜினிகாந்த், அவரது நெருங்கிய நண்பரான கமல்ஹாசன் கட்சியை ஆதரிக்கவே இல்லை.

அதேபோல்தான் இயக்குநராக அதிகம் அறியப்பட்ட சீமான், ஈழப் பிரச்சினைக்குப் பிறகு அரசியல் கட்சியைத் தொடங்கினார். கடந்த பல ஆண்டுகளாக தனித்து நின்று 8% வாக்குகளைப் பெற்று தனது கட்சிக்கு அங்கீகாரம் பெற்றுள்ளார். அவரைப் பற்றியும் அவரது கட்சி பற்றியும் இணைய உலகில் பல ஆடியோக்கள் லீக் ஆகி அவரை குறிவைத்துப் பல விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
தொடர்ந்து தனது கட்சியில் உள்ள நிர்வாகிகள் வெளியேறுவது பெரிய விவாதமாக மாறியிருக்கிறது. அதைப்பற்றிப் பேசிய சீமான், “எங்கள் கட்சிக்குள் உள்ள பொறுப்பாளர்களுக்குப் பேசிக் கொள்கின்ற அந்தரங்கமான விசயங்களை வெளியில் எடுத்துப் போடுவதால் என்ன பலன்? அதனால் பெட்ரோல் விலை குறையப் போகிறதா? அல்லது விலைவாசி குறையப் போகிறதா? எங்கள் கட்சி விசயம் சார்ந்த உரையாடலை வெளியிடுவதால் மக்களுக்கு என்ன பயன்? ஆனால், அந்த அசிங்கமான வேலையை திமுக செய்கிறது” என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் தமிழ் உணர்வு பற்றிப் பேசினால் பலரும் இனவாதம் என்கிறார்கள் என்றும் பாஜக கூட தங்களை இனவாதக் கட்சி என்று சொல்வதாகவும் பேசி இருக்கும் சீமான், ஆந்திராவில் தெலுங்கு தேசம் எனப் பெயரை வைத்துள்ள கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வது ஏன் என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார். அதேபோல் பாஜகவின் பி டீம் என்ற குற்றச்சாட்டு குறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில், “நாங்கள் உண்மையிலேயே பாஜக பி டீம் தான். ஏனென்றால் திமுகவை எதிர்க்கிறோம் இல்லையா? அதனால் அனைவரும் பி டீம் தான்” என்றும் தெரிவித்திருக்கிறார்.
ரஜினிகாந்த் சந்திப்புக்குப் பிறகு பலரும் “நமச்சிவாயம் வாழ்க என்று சொல்வதைவிடச் சீமான் நாசமாகப் போகட்டும் என்று சொல்லிவிட்டுத்தான் பலரும் படுக்கிறார்கள். காலையில் எழுகிறார்கள். என்னை சங்கி என்கிறார்கள். கிறிஸ்துவர் என்றார்கள். பிரபாகரனை மலையாளி என்றார்கள். எம்.ஜி.ஆர்கூட அதற்காகவே அவருக்கு உதவினார் என்கிறார்கள். காமராஜர் பச்சை தமிழன் என்றால் அவரது பேரன் மலையாளி ஆகிவிடுவானா? ” எனப் பதிலளித்திருக்கிறார்.
மேலும் அவர், “தமிழ்நாட்டில் ரஜினியைச் சந்திக்காதவர்கள் அரசியல்வாதி யார் இருக்கிறார்கள்? கருணாநிதியுடன் கூடவே ரஜினி இருந்திருக்கிறார். கருணாநிதி விழாவில் கமலும் ரஜினி பக்கத்துப் பக்கத்தில் உட்கார்ந்து இருந்ததை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஸ்டாலின் விழாவில்கூட ரஜினி பங்கேற்கிறார். வருடத்திற்கு 2 படங்களை வைத்து தயாரித்து கோடிகோடியாக சம்பாதிக்கிறது திமுக குடும்பம். பாஜகவும் கூட்டணியே வைத்துள்ளார்கள். மோடியை உதயநிதி ஸ்டாலின் உட்படப் பலரும் சந்தித்து இருக்கிறார்கள். என்னைப் பல முறை மோடியைச் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தி அழைத்த போதுகூட மறுத்திருக்கிறேன்” என ரெட் பிக்ஸ் தளத்திற்கு அளித்துள்ள பேட்டில் பதிலடி அளித்துள்ளார்.
வேறு ஒரு கேள்விக்கு விஜய் எதிர்ப்பு பற்றிப் பேசி இருக்கும் சீமான், “சினிமா புகழ் என்பது கட்சியைத் தொடங்குவதற்கு உதவி செய்யும். ஆனால், அரசியல் களத்தில் தொடர்ந்து பயணிப்பதற்குத் தெளிவாகக் கொள்கைதான் பலனளிக்கும். அரசியல் களத்தில் பலர் வருவார்கள். அதை சமாளித்துத்தான் வெற்றி பெற வேண்டும். அதுதான் புரட்சிக்கு அடையாளம். எளிதாக நாங்கள் வென்றுவிட முடியாது” என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications