ஒருபக்கம் ஜோதிமணி.. இன்னொருபக்கம் அண்ணாமலை.. 2 முக்கியமான மீட்டிங்.. முதல்வருக்கு ஏற்பட்ட தலைவலி!
சென்னை: தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் இன்று ஆளுனர் ஆர்என் ரவியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைக்க உள்ளனர். அதேபோல் இன்னொரு பக்கம் காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று தமிழ்நாடு டிஜிபியை சந்தித்து முக்கியமான கோரிக்கை ஒன்றை வைக்க உள்ளனர். அடுத்தடுத்து நடக்க உள்ள இந்த இரண்டு கூட்டங்களும் முதல்வர் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய ஆசிட் டெஸ்டாக இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றது. ஏன் இந்த மீட்டிங்குகள் நடக்கிறது என்று விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்ததில் இருந்தே திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும், அதற்கு முன்பும் திமுக தனது தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றி அறிவிப்பை வெளியிட்டது. திமுகவின் முக்கியமான சில வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை திமுக ஆட்சிக்கு எதிராக பொது மக்கள் இடையே பெரிய அளவில் எதிர்ப்புகள் எழவில்லை. பெரிதாக இது தவறு, அது தவறு என்று சொல்லும் அளவிற்கு எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினுக்கு தலைவலியாக இரண்டு பிரச்சனைகள் ஏற்பட்டன.

திமுக எம்பிக்கள்
ஒரு பக்கம் திமுக எம்பி ரமேஷ் கொலை வழக்கில்சிக்கினார். பண்ருட்டி முந்திரி ஆலையில் ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக எம்பி ரமேஷ் நேற்று நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். கோவிந்தராஜ் என்ற நபர் திமுக எம்பி டிஆர்வி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் மர்மமான முறையில் மரணம் அடைந்த வழக்கு திமுகவிற்கு எதிராக திரும்பிய நிலையில் ரமேஷ் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். ஆளும் கட்சியை சேர்ந்த எம்பி ஒருவர் கொலை வழக்கில் சிக்கி இருப்பது திமுகவிற்கு எதிராக திரும்பி உள்ளது.

ஞானதிரவியம்
இன்னொரு பக்கம் பாஜக நிர்வாகியை தாக்கியதாக திமுக எம்பி ஞானதிரவியம் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. காவல்கிணறு விலக்கில் ஹோட்டல் ஒன்றில் பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரன் என்பவர் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது தி.மு.க எம்.பி ஞானதிரவியம் மற்றும் அவரது ஆட்கள் பாஸ்கரனை தாக்கியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. ஒரு திமுக எம்பி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இன்னொரு எம்பி வழக்கில் சிக்கி இருக்கிறார். திமுக ஆட்சிக்கு கருப்பு புள்ளியாக இந்த இரண்டு சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன.

இன்று சந்திப்பு
இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்து பேச உள்ளனர். தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து இவர்கள் ஆளுநரிடம் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. ஆளுநரிடம் மனு அளிக்க இருக்கும் அண்ணாமலை, திமுக எம்பிக்கள் மீதான புகார்கள் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு தமிழ்நாடு அமைச்சர்கள் சிலரை பற்றியும் புகார் வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளுனர்
மேலும் சமீபத்தில் கோவில்களை வார விடுமுறை நாட்களில் திறக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்து போராட்டம் செய்தது. இதை பற்றியும் தனது மனுவில் அண்ணாமலை குறிப்பிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற புகார்களில் ஆளுநர் பெரிதாக நடவடிக்கை எதையும் எடுக்க முடியாது என்ற நிலையிலும் அண்ணாமலை ஆளுநர் ஆர்என் ரவி இடையில் நடக்கும் இந்த சந்திப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இன்னொரு பக்கம் காங்கிரஸ்
இந்த சந்திப்பு ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இன்று டிஜிபியை சந்திக்க உள்ளார். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவிடம் ஜோதிமணி புகார் அளிக்க உள்ளார். இது தொடர்பாக ஜோதிமணி செய்துள்ள ட்வீட்டில். இன்று காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் திரு.கு. செல்வப்பெருந்தகை அவர்களும், நானும் காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களை சந்தித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்( UAPA) கீழ் கைதுசெய்ய வேண்டும் என்று புகார் அளிக்க உள்ளோம், என்று குறிப்பிட்டுள்ளார்.

டிஜிபி சந்திப்பு
கன்னியாகுமரியில் நடந்த நாம் தமிழர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கொலை குறித்து நாம் தமிழர் நிர்வாகிகள் பேசிய சில கருத்துக்கள் சர்ச்சையானது. இதில் சாட்டை துரைமுருகன் பேசிய கருத்துக்கள் காரணமாக அவர் நேற்று கைதும் செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் சீமானையும் இதில் கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்து வருகிறது. இது தொடர்பாக இன்று நேரடியாக டிஜிபியை சந்தித்து ஜோதிமணி உள்ளிட்ட நிர்வாகிகள் புகார் வைக்க உள்ளனர்.

ஸ்டாலின் என்ன செய்வார்?
ஒரே நாளில் அடுத்தடுத்து நடக்க உள்ள இரண்டு மீட்டிங் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆசிட் சோதனையாக மாறியுள்ளது. இரண்டுமே சட்ட ஒழுங்கு பிரச்சனை. அண்ணாமலை ஆளுநர் இடையே நடக்கும் மீட்டிங் மூலம் பெரிதாக ஆட்சிக்கு எதிராக எதுவும் நடந்துவிடாது. சட்டப்படி ஆட்சிக்கு சிக்கல் இல்லை, என்றாலும் திமுக எம்பிக்கள் குறித்த புகார்கள் ஆளுநரிடம் செல்வது திமுகவிற்கு தலைவலியை கொடுக்கும். கறையின்றி ஆட்சி நடந்து வரும் நிலையில் ஆளுநருக்கு செல்லும் இந்த புகார் கொஞ்சம் கவனம் பெறும்.

பாஜகவை எதிர்கொள்வாரா?
ஆளுநர் சட்டப்படி எதுவும் செய்ய முடியாது என்றாலும் கூட பாஜக ஆளுநர் மூலம் அரசுக்கு நெருக்கடி கொடுக்க முடியுமா என்று பார்க்கும். இதன் காரணமாகவே இன்று ஆளுநர் - அண்ணாமலை இடையே நடக்கும் மீட்டிங் கவனம் பெறுகிறது. இன்னொரு பக்கம் டிஜிபியை காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பதால் சீமானை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன. ராஜிவ் காந்தி கொலை குறித்து பேசப்பட்ட மேடையில் சீமான் அமர்ந்து இருந்ததால் அவரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

சீமான் மீது நடவடிக்கை
சீமானுக்கு எதிராக இப்போது டிஜிபி வரை புகார் செல்ல உள்ளதால் அரசு இது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் இதனால் கொதிப்பில் உள்ளனர். இது மிகப்பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சனை என்பதால் முதல்வர் ஸ்டாலின் இதில் ஒரு முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஒரு பக்கம் ஜோதிமணி.. இன்னொரு பக்கம் அண்ணாமலை என்று இரண்டு அடுத்தடுத்த மீட்டிங்குகள் காரணமாக தமிழ்நாடு அரசியல் களம் இன்று பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications