’இன்ஸ்டகிராமில் ரீல்ஸ்’ ஜாலிக்காக விலை உயர்ந்த பைக்குகள் கொள்ளை.. சிக்கிய புள்ளிங்கோஸ்
சென்னை: இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு கெத்து காட்டுவதற்காக விலை உயர்ந்த பைக்குகளை திருடி வந்த சென்னை ஓட்டேரியை சேர்ந்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். திருடும் பைக்குகளில் ஜாலியாக நண்பர்களுடன் ஊர் சுற்றுவதோடு வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஆக பதிவு செய்து வந்துள்ளனர். இவர்களிடம் இருந்து 8 விலை உயர்ந்த பைக்குகள் மீட்கப்பட்டன.
தமிழகத்தில் திருட்டு போன்ற குற்ற செயல்களை ஒடுக்க என்னதான் போலீசார் ஒருபக்கம் நடவடிக்கை எடுத்தாலும் மற்றொரு பக்கம் திருட்டு சம்பவங்கள் குறைந்தபாடில்லை.
தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதுவும் மக்கள் ஆசை ஆசையாய் வாங்கி வைத்திருக்கும் இருசக்கர வாகனங்களை திருடும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகின்றன.

போலீஸ் நிலையத்தில் புகார்
குறிப்பாக தலைநகர் சென்னையில் இதுபோன்று இருசக்கர வாகனங்கள் திருடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் தனது வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தி வைத்திருந்தார். பிறகு வீட்டிற்கு வெளியே வந்து பார்த்த போது பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் தனது பைக் திருடு போனது குறித்து சீனிவாசன் புகார் அளித்தார்.

சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக் திருடுபோனது தொடர்பான விசாரணையை தொடங்கினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில் பைக்கை திருடிய பாலமுருகன் (18), சோமேஷ்(21) ஆகிய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த என்பது தெரியவந்தது.

8 விலை உயர்ந்த பைக்குகள்
மேலும் இருவருமே திருட்டு குற்றவாளிகள் அல்ல என்பதும் பொழுதுபோக்குக்காக விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடி வந்ததும் தெரிய வந்தது. ஜாலியாக அந்த பைக்குகளில் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதோடு வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஆக பதிவு செய்து வந்துள்ளனர். இவர்களிடம் இருந்து 8 விலை உயர்ந்த பைக்குகள் மீட்கப்பட்டன. ஓட்டேரி, அயனாவரம், டி.பி.சத்திரம், சிந்தாதிரிப்பேட்டை, நீலாங்கரை, திருமுல்லைவாயல் உள்ளிட்ட காவல் நிலையங்களிலும் இந்த இரண்டு இளைஞர்கள் மீது வழக்குகள் ஏற்கனவே உள்ளன.

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதற்காக
சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவு செய்வதற்காக வித விதமான பைக்குகளை திருடியதோடு அதில் சாகசங்களை செய்து வீடியோவாக ரீல்ஸ் மற்றும் யூடியூப் பக்கத்தில் பதிவேற்ற இந்த இரு இளைஞர்களும் இதற்கு முன்பாக திருடிய பைக்குகளை வைத்து பல வீடியோக்களை பதிவு செய்து வந்துள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications