ஒடிசா சென்றடைந்த உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தமிழ்நாடு குழுவினர்.. விபத்து நடந்த இடத்திற்கே விசிட்!
சென்னை : சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 ரயில்கள் மோதி தடம்புரண்ட விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினர் ஒடிசா சென்றடைந்துள்ளனர். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் நேரில் சந்திக்க உள்ளனர்.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே இரவு 7 மணியளவில் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் சரிந்தன.

அப்போது பெங்களூரில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்றுகொண்டிருந்த யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரயில், தடம் புரண்ட ரயில் பெட்டிகள் மீது மோதி அந்த ரயிலும் விபத்துக்கு உள்ளானது. மேலும், சரக்கு ரயிலும் இந்த விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த 900க்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்குள்ளான பகுதிக்கு அருகில் வசிக்கும் உள்ளூர் நபர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 280 வரை இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்குடன் தொலைபேசியில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயாராக இருப்பதாக உறுதி அளித்தார். மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள் உள்ளிட்ட குழுவினர் ஒடிசா செல்வார்கள் என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துறை கூடுதல் தலைமைச் செயலர் பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலர் குமார் ஜெயந்த், தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக் ஆகிய 5 பேர் அடங்கிய குழுவினர் ஒடிசா புறப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கியவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய இந்த குழுவினர் ஒடிசா சென்றுள்ளனர். இன்று காலை 9.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர்கள் ஒடிசாவுக்கு கிளம்பினர். புவனேஸ்வரில் இருந்து விபத்து நடந்த பாலசோர் மாவட்டத்துக்கு சென்று அங்கு தமிழ்நாடு அரசு சார்பில் மீட்பு பணிகளை ஒருங்கிணைக்க உள்ளனர்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "முதல்வர் அறிவுறுத்தலின்படி ரயில் விபத்து குறித்து விவரம் விசாரிக்க அமைச்சர் சிவசங்கர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் அங்கு செல்கிறோம். ஒடிசா முதல்வருடன் தமிழக முதல்வர் தொலைபேசியில் பேசியுள்ளார். வருந்தத்தக்க செய்திகள் வந்துக்கொண்டிருக்கின்றன.
விபத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளிவரவில்லை. அங்கு சென்றவுடன் உங்களுக்கு மேலும் தகவல்களை தருகிறேன். ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ மருத்துவமனை வசதிகளும் தயார் நிலையில் உள்ளது" எனத் தெரிவித்தார்.
உதவி தேவைப்படும் தமிழர்களுக்கு களமிறங்கும் திமுக அமைச்சர் உதயநிதி ஒடிசா செல்கிறார். pic.twitter.com/zzLQdFKM8e
— SEENIVASAN DMK (@Seenivasandmk) June 3, 2023












Click it and Unblock the Notifications