தளபதி அண்ணன் விஜய்... நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணம் -உதயநிதி ஸ்டாலின் புகழாரம்
சென்னை: நடிகர் விஜயின் 46-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்வீட்டரில் வாழ்த்து கூறியுள்ள அவர், அண்ணன் தளபதி விஜய் என புகழாரம் சூடியுள்ளார்.
மேலும், தாம் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர் நடிகர் விஜய் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வாழ்த்து மழை
நடிகர் விஜய் இன்று 46-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் அவருக்கு திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். முகநூல், ட்வீட்டர், உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நடிகர் விஜயின் புகைப்படங்களை பதிவிட்டு அவர் குறித்த பெருமைகளையும், சிறப்புகளையும் எடுத்துக்கூறி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் நடிகர் விஜயை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அண்ணன் விஜய்
இந்நிலையில் நடிகர், தயாரிப்பாளர், திமுக இளைஞரணிச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை கொண்ட உதயநிதி ஸ்டாலின், விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அண்ணன் தளபதி என விஜயை குறிப்பிட்டு வாழ்த்து கூறியுள்ளார். மேலும், விஜயை பொறுத்தவரை ஒரு நல்ல நண்பர் என்றும், இயல்பான அழகான நட்புக்குரியவர் எனவும் உதயநிதி குறிப்பிட்டுள்ளார். விஜய் எல்லோரிடத்திலும் எளிமையாக பழகக்கூடியவர் எனவும் தெரிவித்திருக்கிறார்.

விஜய் தான் காரணம்
தாம் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர் நடிகர் விஜய் என்றும், திரையில் வெகுஜன நாயகர்; நேரில் நல்ல நண்பர் எனவும் சிலாகித்துள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குருவி படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக உதயநிதி ஸ்டாலின் முதல் முதலில் அறிமுகமானதும் அப்போது தான். அதனை தான் தனது ட்வீட்டரில் உதயநிதி சுட்டிக்காட்டி இருக்கிறார்.

ஏமாற்றம்
இதனிடையே நடிகர் விஜய் பிறந்தநாளை திருவிழாவை போல் கொண்டாடி மகிழும் அவரது ரசிகர்கள் கொரோனா பேரிடர் காரணமாக இந்தாண்டு அதனை தவிர்த்துள்ளனர். இருப்பினும் போஸ்டர்கள் மூலம் தங்கள் தலைவனுக்கு விதவிதமான அடைமொழிகளை சூட்டி அன்பையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications