'அந்த' சம்பவம்.. எதிர்பார்க்கல.. தட்டித் தூக்க முடிவெடுத்தேன் - 'அசர' வைக்கும் உதயநிதி
சென்னை: கலைஞரின் பேரன்.. ஸ்டாலினின் மகன்.. அதனால் சீட்.. என்று எங்கு சென்றாலும் மணிக்கு 250 கி.மீ வேகத்தில் துரத்திக் கொண்டிருக்கும் விமர்சனங்களை அலேக்காக அப்பால் வைத்து, 2021 சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 'சிக்ஸர்' அடிப்பதற்கு காத்திருக்கிறார் உதயநிதி.
திமுகவின் கோட்டைகளில் ஒன்று சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி. மூன்று முறை சேப்பாக்கத்தில் வெற்றிப் பெற்று, அதில் இரண்டு முறை தமிழக முதல்வரானவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி. 2011-ல் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, மேலும் சில பகுதிகளை இணைத்து சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியாக மாற்றப்பட்டது.
இத்தொகுதியில் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனா கோரத்தால் மறைந்துவிட்ட நிலையில், தி.மு.க இளைஞரணிச் செயலாளரும், ஸ்டாலினின் மகனுமான உதயநிதி இத்தொகுதியில் களமிறங்கியுள்ளார்.

ஒற்றை விமர்சனம்
43 வயதான உதயநிதிக்கு சீட் கொடுக்கப்பட்டதில் இருந்தே, 'வாரிசு அரசியல்' என்ற ஒற்றை குற்றச்சாட்டு அவர் மீது தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், அவரை எதிர்த்து போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள், உதயநிதியை வேறு என்ன சொல்லி விமர்சிப்பது என்பது தெரியாமல், 'கலைஞர் குடும்பத்தின் வாரிசு' என்று ரிப்பீட் செய்து வருகின்றனர்.

பேசுறவங்க பேசலாம்
ஆனால், உதயநிதியோ எதைப் பற்றியும் கவலைப்படுவதாய் தெரியவில்லை. அவர் பிரதமர் மோடி முதல், முதல்வர் பழனிசாமி வரை அனைவரையும் தனது பிரசாரத்தில் விமர்சித்து வருகிறார். பாரபட்சமின்றி விமர்சிக்கிறார். தற்போது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் நிலவரம் என்பது, உதயநிதிக்கு ஆதரவாக இருப்பதாகவே கூறப்படுகிறது. அந்தளவுக்கு அத்தொகுதியில் திமுக கட்டமைப்பு பலமாக உள்ளதாம்.

அதனால் கிடைக்கும் வெகுமதி
இங்கு உதயநிதிக்கு எதிராக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாமக சார்பில் போட்டியிடும் கஸ்ஸாலி, எந்தவிதத்திலும் டஃப் கொடுக்க முடியாது என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் அடிக்காத குறையாக அடித்துக் கூறுகின்றனர் உடன்பிறப்புகள். இவை அத்தனையும் திமுக குடும்ப வாரிசு, ஸ்டாலினின் மகன் என்ற ஒரே அடையாளத்தால் கிடைக்கும் வெகுமதி என்பதே எதிர்தரப்பினரின் குற்றச்சாட்டு. அதில் நியாயம் இல்லாமலும் இல்லை.

2018ல் தீவிர அரசியல்
இதுகுறித்து உதயநிதியை சமீபத்தில் அளித்த பேட்டியில், "இப்போதும் சொல்கிறேன் நான் அரசியலுக்கு வருவேன் என்று ஒருநாள் எதிர்பார்த்ததில்லை. ஆனால், 2016 தேர்தலில் திமுக குறைந்த சதவிகித வித்தியாசத்தில் தோல்வியடைய வைத்தது என்னை உண்மையில் வேதனையடைய வைத்தது. அந்த வயதிலும், தாத்தா கலைஞர் அவர்கள் தேர்தலில் அப்படி போராடியதை நான் பார்த்தேன். ஆனால், அந்த நேரத்தில் நான் அன்பில் மகேஷுக்காக திருச்சியில் பிரசாரம் செய்தேன். அவ்வளவு தான் அன்றைய தேதியில் என்னுடைய அரசியல் செயல்பாடு. பிறகு 2018ல் தான் அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட துவங்கினேன். ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடந்த கிராம கூட்டங்களிலும் கலந்து கொண்டேன்.

கான்ஃபிடன்ட்
அந்த பங்களிப்புகள் எனக்கு அளவில்லா தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுத்தது. 2019 மக்களவை தேர்தலில், நான் எனது பிரசாரத்தின் 2வது நாளே எனது வாகனத்தை மாற்றும் சூழல் ஏற்பட்டது. அந்தளவுக்கு கூட்டம் கூடியது. அந்த வரவேற்பை என்னால் மறக்கவே முடியாது" என்று தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி, புதுச்சேரியில் ஆளுங்கட்சியை கவிழ்த்தது போல, பாஜக தமிழகத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யும். எல்லாவாற்றுக்கும் தயாராக உள்ளோம். எங்கள் எம்.எல்.ஏ.க்களை எவரும் வாங்க முடியாது என்று அவ்வளவு கான்ஃபிடன்ட்டாக கூறுகிறார் உதயநிதி.

தவிர்க்க முடியா சக்தி
கட்சிக்காக பல வருடங்களாக உழைக்கும் எத்தனையோ பேர் இருக்கும் சூழலில், வெறும் 3 வருடம் அரசியல் பணிகளில் ஈடுபட்ட உதயநிதிக்கு சீட் கொடுக்கப்பட்டது 'வாரிசு அரசியல்' இல்லையா? என்ற கேட்பவர்களின் கேள்வியில் 100 சதவிகிதம் நியாயம் உள்ளதை மறுக்க முடியாது. அதே சமயம், இந்த விமர்சனத்தைத் தாண்டிய அவரது அரசியல் புரிதல், பக்குவம், வாய்க்கு வந்ததை உளறாமல் இருப்பது போன்றவை உதயநிதியின் ஸ்பெஷல் குவாலிட்டிகளாக நிச்சயம் கருதலாம். யார் கண்டா.. 2026 தேர்தலில் அவர் தவிர்க்க முடியாத சக்தியாக கூட உருவெடுத்திருக்கலாம்.












Click it and Unblock the Notifications