நான் ஒரு அவுட் ஸ்டாண்டிங் மாணவன்..ஆசிரியர்களை பார்த்தாலே பதற்றமா இருக்கு! துணை முதல்வர் உதயநிதி கலகல
சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார். அப்போது பேசிய அவர், நான் ஒரு வகுப்புக்கே செல்லாத அவுட் ஸ்டாண்டிங் மாணவன் எனவும், ஆசிரியர்களை பார்த்தாலே இன்றும் பதற்றமாக இருக்கிறது என கலகலப்பாக பேசினார்.
சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர்,"ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற 2 ஆயிரத்து 457 தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன், பெருமையடைகின்றன்".

அதோடு சேர்த்து பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக 'திறன்' மற்றும் TN Spark ஆகிய இரண்டு முக்கியமான முன்னெடுப்புகளையும் இங்கே தொடங்கி வைப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக இந்த 3 நாட்களில் மட்டும் நடைபெறுகின்ற 2 நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டுள்ளேன். நேற்று முன்தினம் இதே அரங்கில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக ஒரு நிகழ்ச்சி, ஒரே ஒரு மாற்றம் என்னவென்றால் 2 நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி மாணவர்களுக்காக நடந்தது.
இன்றைக்கு ஆசிரியர்களுக்காக ஒரு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார் நம்முடைய பள்ளிக் கல்வித்துறையினுடைய அமைச்சர் அவர்கள். எனக்கு எப்பவுமே ஆசிரியர்களைப் பார்த்தாலே கொஞ்சம் பதற்றம் வந்துவிடும். ஒன்றிரண்டு ஆசிரியர்களை பார்த்தாலே பதற்றம் வந்து விடும். இன்றைக்கு இத்தனை ஆசிரியர்கள், 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் வந்து இருக்கிறீர்கள். எனவே உங்களைப் பார்க்கும்போது கொஞ்சம் பதற்றம் அதிகமாகவே இருக்கிறது.
ஏனென்றால் பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி நான் ஒரு அவுட்ஸ்டாண்டிங் மாணவன் தான். அவுட்ஸ்டாண்டிங் மாணவன் என்றால் என்னவென்று சொல்கிறேன் என்று உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் என்று நான் நம்புகின்றேன். இருந்தாலும், உங்களை எல்லாம் இன்றைக்கு ஒரே இடத்தில் பார்க்கும் போது மிகவும் பெருமையாக இருக்கின்றது.
பொதுவாகவே திராவிட இயக்கத்துக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு நெருங்கிய பந்தம் உண்டு. குறிப்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மீது, தந்தை பெரியார் அவர்கள், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் பெரும் மதிப்பும், மரியாதையும் வைத்து இருந்தார்கள். இன்றைக்கு குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால், மகிழ்ச்சியான விசயம் இன்றைக்கு நிறைய மகளிர் ஆசிரியர்களாக இங்கே அமர்ந்து இருக்கிறீர்கள்.
கலைஞர் அவர்களுடைய பேனா தான் ஒன்றிய அரசுக்கு இணையான ஒரு ஊதியத்தை மாநில அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெற்றுக் கொடுத்தது. ஒரே கையெழுத்தின் மூலம் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியவர் யார் என்று நான் சொல்ல தேவையில்லை உங்களுக்கே தெரியும். ஆனால், ஒரே கையெழுத்தின் மூலம், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பணி நிரந்தரம் செய்த ஒரே தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்.
ஆகவே, கலைஞர் அவர்கள் வழியிலே செயல்பட்டு வருகின்ற நம்முடைய முதலமைச்சர் அவர்களும், அரசு பணியாளர்களுக்கு, ஆசிரியர்களுக்கு என்னென்ன வேண்டும் என்பதை உரிய நேரத்தில் உங்களுடைய தேவையை அறிந்து அந்த திட்டங்களை தந்து கொண்டிருக்கிறார்கள்.
அரசுப் பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் இன்றைக்கு இவ்வளவுத் திட்டங்களை வழங்குகிறோம் என்றால், இதை எல்லாம் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் செலவாக பார்க்கவில்லை. அவற்றை எல்லாம் நம்முடைய தமிழ்நாட்டின் எதிர்காலத்தின் மீதான முதலீடாகத்தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பார்க்கின்றார்கள்." என்றார்.












Click it and Unblock the Notifications